வன்முறைகளை தடுத்து நிறுத்தச் சொல்லி பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேசதுரோக வழக்கா? கே.எஸ்.அழகிரி கண்டனம்


வன்முறைகளை தடுத்து நிறுத்தச் சொல்லி பிரதமருக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேசதுரோக வழக்கா? கே.எஸ்.அழகிரி கண்டனம்
x
தினத்தந்தி 5 Oct 2019 4:00 AM IST (Updated: 5 Oct 2019 3:48 AM IST)
t-max-icont-min-icon

கும்பல் வன்முறையினால் தாக்குதல்கள், படுகொலைகள் நடைபெற்று வருவதை பிரதமர் நரேந்திர மோடிக்கு உணர்த்தும் வகையில் 49 பிரபலங்கள் பகிரங்கமாக கடிதம் எழுதினர்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. ஆட்சியில் பெருகி வரும் சகிப்பின்மை காரணமாக கும்பல் வன்முறையினால் தாக்குதல்கள், படுகொலைகள் நடைபெற்று வருவதை பிரதமர் நரேந்திர மோடிக்கு உணர்த்தும் வகையில் 49 பிரபலங்கள் பகிரங்கமாக கடிதம் எழுதினர். இதில், பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்தினம், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, நடிகை ரேவதி ஆகியோர் அடங்குவர். பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்ப்பதன் மூலம் இத்தகைய வன்முறைகள் தடுத்து நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையோடும், சமூக அக்கறையின் காரணமாகவும் இக்கடிதத்தை எழுதியுள்ளனர். ஆனால் அந்த கடிதத்தை எழுதியவர்களுக்கு எதிராக தேசதுரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பீகார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைவிட ஜனநாயக விரோத அச்சுறுத்தல் நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

வகுப்புவாத சக்திகளின் வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு கடிதம் எழுதி முறையிட்ட செயலுக்காக அவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடுப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். நாட்டு நலனில் அக்கறையோடு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது புனையப்பட்டிருக்கும் வழக்கை உடனடியாக திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story