அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? செல்போன் செயலி மூலம் கண்காணிக்க நடவடிக்கை


அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? செல்போன் செயலி மூலம் கண்காணிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Oct 2019 4:45 AM IST (Updated: 6 Oct 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? என்பதை செல்போன் செயலி மூலம் கண்காணிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை,

பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் எப்படி இருக்கிறது? என்பது குறித்து கண்காணிக்க பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு, இதற்காக ஒரு செல்போன் செயலியை வடிவமைத்து இருக்கிறது.

இந்த செல்போன் செயலி முதற்கட்டமாக சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சோதனை முறையில் செயல்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்புதிய திட்டம் மூலம் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? என்பது குறித்தும், மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் செல்போன் செயலியில் பதிவு செய்யப்படும்.

இதுதவிர வகுப்பறையில் மாணவர்கள் எழுப்பிய கேள்விகள், அவர்களின் சந்தேகங்களுக்கு எந்த மாதிரியான பதில் அளிக்கப்பட்டது? மாணவர்கள் வருகை பதிவேடு, செயல்முறை கற்பித்தல் எந்த அளவுக்கு இருந்தது? போன்ற தகவல்களையும் அந்த செயலியில் குறிப்பிட ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆசிரியர்கள் அளிக்கும் விவரங்களை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வுக்கு சென்று மதிப்பீடு செய்த பின்னர், பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் குறித்து கணக்கிட முடியும் என்றும், முதற்கட்டமாக சென்னை, திருவண்ணாமலையில் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த திட்டங்களில் குறைகள் இருந்தால் அது நிவர்த்தி செய்யப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பின்பு மாநில முழுவதும் இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story