ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் விலை உயர்வு பொரி-அவல், பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது


ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் விலை உயர்வு பொரி-அவல், பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது
x
தினத்தந்தி 6 Oct 2019 4:45 AM IST (Updated: 6 Oct 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள், பழங்கள் விலை உயர்ந்துள்ளது. பொரி-அவல் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது.

சென்னை,

ஆயுதபூஜை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த நாளில் தொழிலாளர்கள் தங்கள் உபகரணங்களை பூஜையிட்டு வழிபடுவார்கள். அந்தவகையில் வீடுகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆயுதபூஜை உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தற்போது அவல், பொரி, கடலை, சர்க்கரை, பழங்கள், வாழை மரம், தோரணங்கள், இனிப்புகள் விற்பனை விறுவிறுப்பு அடைய தொடங்கியுள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்கள் மற்றும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக பூக்கள் விலை வெகுவாக அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு காமராஜர் புஷ்ப வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் எம்.டி.அருள் விசுவாசம் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் வரவழைக்கப்படுகின்றன. தற்போது விளைச்சல்-வரத்து குறைந்ததின் எதிரொலியாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்கள் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால் அதன் விலை அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ரூ.50 வரை விற்பனையான ஒரு கிலோ சாமந்தி பூ தற்போது ரூ.200 வரை விற்பனை ஆகிறது. ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்ட மல்லி தற்போது ரூ.750 ஆக உயர்ந்திருக்கிறது. கனகாம்பரம் பூவின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. செண்டுமல்லி, சம்பங்கி போன்ற பூக்களின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை(கிலோவில்) நிலவரம் வருமாறு:-

சாமந்தி - ரூ.150 முதல் ரூ.200 வரை, ரோஸ் - ரூ.100 முதல் ரூ.150 வரை, மல்லி ரூ.750, சாதிமுல்லை - ரூ.450, கோழிக்கொண்டை - ரூ.50, செண்டுமல்லி - ரூ.50, கனகாம்பரம் - ரூ.400 முதல் ரூ.500 வரை, சம்பங்கி (லில்லி பிளவர்) - ரூ.200, கட்டு ரோஸ் (எண்ணிக்கை-20) - ரூ.120, மருகு (கட்டு)- ரூ.5, அரளி - ரூ.200.

கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது வியாபாரம் மந்தமாகவே இருக்கிறது. நாளை (அதாவது இன்று) ஒருநாள் மட்டும் நல்ல வியாபாரத்தை எதிர்பார்க்கலாம். ஆனாலும் இந்த ஆண்டு பெரியளவில் வியாபாரம் நடக்காதது சற்று வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பூக்களை போல பழங்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகக்குழு உறுப்பினர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

ஆயுதபூஜையை முன்னிட்டு சாத்துக்குடி, கொய்யாப்பழங் களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட சாத்துக்குடி, தற்போது ரூ.80-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிலோ ரூ.40-க்கு விற்பனையான கொய்யாப்பழம் தற்போது ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆப்பிள் விலை சற்று உயர்ந்திருக்கிறது. மற்றபடி பழங்களின் விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை. விளைச்சல்-வரத்திலும் பிரச்சினை இல்லை.

பழங்களின் விலை(கிலோவில்) நிலவரம் வருமாறு:-

வாஷிங்டன் ஆப்பிள்- ரூ.200 முதல் ரூ.250 வரை, சிம்லா ஆப்பிள்- ரூ.100 முதல் ரூ.130 வரை, காஷ்மீர் ஆப்பிள் (டெலிசியஸ்)- வரத்து இல்லை, மாதுளை- ரூ.120, சாத்துக்குடி- ரூ.80, ஆரஞ்சு (கமலா)- ரூ.60, ஆரஞ்சு (எகிப்து) - ரூ.130, கருப்பு திராட்சை- ரூ.80, பன்னீர் திராட்சை- ரூ.90, திராட்சை (சீட்லெஸ்)- ரூ.100, கொய்யா- ரூ.80 முதல் ரூ.100 வரை, தர்பீஸ்- ரூ.15, அன்னாசிபழம்- ரூ.50, வாழை (தார்)- ரூ.350 முதல் ரூ.500 வரை. இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான பொரி-அவல் கடைகள் முளைத்துள்ளன. ஒரு படி ரூ.20-க்கு பொரி விற்பனை ஆகிறது. அதேபோல அவல், சர்க்கரை, பொறிகடலை, நிலக்கடலை, கற்கண்டு உள்ளிட்டவை பாக்கெட்டுகளில் ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் சந்தனம், குங்குமம், அகர்பத்தி, சாம்பிராணி, விபூதி, சூடம் உள்ளிட்ட பூஜை பொருட்களும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விடுமுறை தினமான இன்று(ஞாயிற்றுக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story