சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட குடிநீர் சேவை நிறுத்தம்


சென்னைக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட குடிநீர் சேவை நிறுத்தம்
x
தினத்தந்தி 8 Oct 2019 1:57 PM IST (Updated: 8 Oct 2019 4:20 PM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்படும் குடிநீர் சேவை திட்டம் இன்றுடன் நிறுத்தப்படுகிறது.

சென்னை,

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையை போக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. இருப்பினும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க முடியாமல் தமிழ்நாடு அரசு திணறி வந்தது. 

இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம்  கொண்டுவரப்பட்ட குடிநீர், சுத்திகரிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது. இந்த குடிநீர் போக்குவரத்தை 20 பேர் கொண்ட குழு கண்காணித்து வந்தது.

இத்திட்டத்தின் படி, சென்னைக்கு ரயில் மூலம் நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வரப்பட்டது. ஒரு நாளில் 3 முறை ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டது. ஒரு முறை ரயிலில் குடிநீர் கொண்டு வருவதுக்கு ரூ. 8 லட்சத்து 60 ஆயிரத்தை ரயில்வே துறைக்கு தமிழ்நாடு அரசு கட்டணமாக செலுத்தி வந்தது.

தற்போது வரை 159 முறை, குடிநீர் கொண்டு வரப்பட்டு 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக ரயில் போக்குவரத்துக்கு மட்டும் ரூ. 14 கோடியே 15 லட்சத்து 10 ஆயிரம் செலவிடப்பட்டது.  

இதற்கிடையே சென்னையில் சமீப நாட்களாக பெய்த மழையின் காரணமாக நிலத்தடி நீர் ஓரளவு உயர்ந்துள்ளதாக அரசு தெரிவித்திருந்தது. அதேபோல், சென்னைக்கு கிருஷ்ணா நதியிலிருந்தும் நீர் வரத் தொடங்கியது. இதுவரை பதிவான மழையால் பூண்டி, செங்குன்றம் பகுதியில் உள்ள நீர் தேக்கங்களும் நிரம்பியுள்ளது. 

இதன் காரணமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும், குடிநீர் திட்டத்தை கைவிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜோலார்பேட்டையில் இருந்து கடந்த ஜூலை மாதம் முதல் ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட குடிநீர் சேவை இன்றுடன் நிறுத்தப்படுகிறது.


Next Story