பிரதமர் - சீன அதிபர் வருகை: போக்குவரத்து மாற்றம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை - சென்னை பெருநகர காவல்துறை


பிரதமர் - சீன அதிபர் வருகை: போக்குவரத்து மாற்றம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை - சென்னை பெருநகர காவல்துறை
x
தினத்தந்தி 8 Oct 2019 5:22 PM IST (Updated: 8 Oct 2019 5:22 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் - சீன அதிபர் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் வரும் 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதோடு, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் இருவரும் பார்வையிட உள்ளனர். 

இதை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொல்லியத்துறை அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2019 அக்டோபர் மாதம் 11 மற்றும் 12-ம் தேதிகளில் நடைபெற இருக்கும் மாண்புமிகு பாரதப்பிரதமர் மற்றும் மாண்புமிகு சீன அதிபர் அவர்களின் வருகையின் போது போக்குவரத்து நிறுத்தம் மற்றும் மாற்றம் குறித்தோ, வியாபாரம் கல்வி நிறுவனங்கள் மூடுதல் குறித்தோ, மற்ற நடவடிக்கைகள் குறித்தோ சென்னை பெருநகர் காவல்துறை சார்பாக எந்தவிதமான அறிவிப்பும் செய்யப்படவில்லை.

பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story