விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கக்கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
விவசாய நிலங்களில் மின் அழுத்த உயர் கோபுரம் அமைக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடரெட்டி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு துணை மின் நிலையம் அமைப்பதற்காக சேவகாணபள்ளி கிராம விவசாய நிலங்கள் மீது மின் கோபுரம் அமைத்துள்ளது. உயர் மின் அழுத்த கம்பியை தனியார் தொழிற்சாலைக்கு விவசாய நிலத்தின் மேல் எடுத்து செல்வதால், விவசாயம் பாதிக்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவும், விளைச்சல் அளவும் குறைந்துகொண்டே வருகிறது. விவசாய நிலங்களின் மேல் உயர் மின் கோபுரம் அமைப்பதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்க தடைவிதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ‘மனுதாரர் சார்பாக மாற்று வழி மின்பாதை முன்மொழிவு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. எனவே, இதுகுறித்து அரசிடம் உரிய கருத்து கேட்டு தெரிவிக்க வேண்டும். அதுவரை, சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களில் மின் அழுத்த உயர் கோபுரம் அமைக்கக்கூடாது. தற்போது உள்ள நிலையே தொடரவேண்டும்’ என்று உத்தரவிட்டார். மேலும், விசாரணையை வருகிற 14-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
Related Tags :
Next Story