மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் 350 செண்டைமேள கலைஞர்கள் கின்னஸ் சாதனை முயற்சி
மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் 350 செண்டைமேள கலைஞர்கள் தொடர்ந்து 40 நிமிடம் வாசித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சி நடந்தது.
சென்னை,
விஜயதசமியை முன்னிட்டு மழலையர் குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்றுக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெற்றது.
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து, குருக்கள் முன்பாக ‘ஓம்’ என்ற மந்திரத்தை நாவில் எழுதியும், அரிசியில் ‘அ’ என்ற எழுத்தை எழுத வைக்கவும் செய்தனர்.
மகாலிங்கபுரத்தில் உள்ள அய்யப்பன், குருவாயூரப்பன் கோவில் ஸ்ரீ அய்யப்பா பக்த சபா சார்பில் சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் செண்டைமேளம் வாசிப்பதற்கு இலவசமாக கற்றுக்கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் விஜயதசமியை முன்னிட்டு, நேற்று மாலை 4 மணிக்கு 150 மாணவர்களுக்கு அரங்கேற்றம் நிகழ்ச்சி கோவிலில் நடந்தது.
இதற்காக கோவில் எதிரில் உள்ள சாலையில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு 150 மாணவர்களுடன், கேரளாவில் இருந்து வந்திருந்த 200 செண்டைமேள கலைஞர்களும் நின்று 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து அரங்கேற்றம் செய்தனர். கோவிந்தராஜ் என்ற கோபி செண்டைமேள ஆசிரியர் தலைமையில் நடந்தது.
ஒரே நேரத்தில் 350 செண்டைமேள கலைஞர்கள் தொடர்ந்து 40 நிமிடம் வாசித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியும் நடந்தது.
Related Tags :
Next Story