பூண்டி ஏரியின் நீர்மட்டம் 20 நாட்களில் 13 அடி அதிகரிப்பு


பூண்டி ஏரியின் நீர்மட்டம் 20 நாட்களில் 13 அடி அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 2:33 AM IST (Updated: 10 Oct 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

மழை நீர், கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 20 நாட்களில் 13 அடி அதிகரித்துள்ளது.

சென்னை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கிடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதனிடையே கடந்த மாதம் 18-ந்தேதி பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் எதிர்பாராதவிதமாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளிப்பட்டு அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ள அணை நிரம்பியது. இதனை தொடர்ந்து கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது.

இதனால் ஏரியில் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. 18-ந் தேதி 12.55 அடியாக இருந்த நீர் மட்டம் 25-ந் தேதி 20.25 அடியாக அதிகரித்தது.

தண்ணீர் திறப்பு

இதனிடையே தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி ஆகியோரின் கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 25-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 28-ந் தேதி வந்தடைந்தது. கண்டலேறு அணையில் முதலில் 100 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகப்பட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 800 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 25.55 அடியாக பதிவானது. 938 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 584 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

13 அடி அதிகரிப்பு

பூண்டியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 27 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த மாதம்் 18-ந்தேதி 12.55 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று காலை 25.55 அடியாக பதிவானது. அதாவது மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி ஏரியில் 20 நாட்களில் 13 அடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story