‘தமிழகம் பாலைவனமாகாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்’ வைகோ பேச்சு


‘தமிழகம் பாலைவனமாகாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்’ வைகோ பேச்சு
x
தினத்தந்தி 9 Oct 2019 9:30 PM GMT (Updated: 9 Oct 2019 9:15 PM GMT)

‘தமிழகம் பாலைவனமாகி விடாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்’ என்று வைகோ பேசினார்.

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று இரவு கெடார், விக்கிரவாண்டியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது நகை கடன்களை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் மத்தியில் திட்டமிட்டபடி ஆட்சி அமையவில்லை. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் இது நிறைவேறும். ஸ்டாலின் அறிவித்ததை செய்து தருவார்.

கரும்பு நிலுவைத்தொகை

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை ரூ.1,450 கோடி வழங்க வேண்டி உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இதனை தருவார்களா? என்றால் நம்பிக்கை இல்லை.

மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதோடு இந்துத்துவாவை நிலைநிறுத்த பார்க்கிறது மோடி அரசு. இதை எதிர்க்க அ.தி.மு.க. அரசுக்கு திராணி கிடையாது.

பாலைவனம்

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கவும், எதிர்த்து போராடவும் இந்த அரசுக்கு திராணி கிடையாது. வேளாண் பாதுகாப்பு மண்டலம் அமைக்க வேண்டும் என்று நாமெல்லாம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். ஆனால் அதை அமைக்காமல் பெட்ரோலிய கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதை தடுக்க தமிழக அரசுக்கு சக்தி இல்லை. இதனால் விவசாய விளைநிலங்கள் பாழாகி வருகிறது.

தமிழகம் பாலைவனமாகி விடக்கூடாது, பட்டினி பிரதேசமாகி விடக்கூடாது. இதற்கு இந்த ஆட்சி முதலில் தூக்கி எறியப்பட வேண்டும். தமிழர்களின் நலனை காக்க, விவசாயிகளின் நலனை காக்க தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். தமிழகத்தின் எதிர்காலத்தை காப்பாற்ற தி.மு.க.விற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story