நரேந்திரமோடி - சீன அதிபருக்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு சென்னையில், கலைஞர்கள் தீவிர ஒத்திகை
பிரதமர் நரேந்திரமோடி-சீன அதிபருக்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலம் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் கலைஞர்கள் தீவிர ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை,
வந்தாரை வாழ வைப்பதில் மட்டுமின்றி வரவேற்பதிலும் தமிழர்கள் சிறந்து விளங்குகிறார்கள். வெளிநாட்டு தலைவர்கள் வருகை தருகிறபோது தமிழர்களின் உற்சாக வரவேற்பு அவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் இருக்கும்.
இந்தநிலையில் சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரின் வரலாற்று சிறப்புவாய்ந்த சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.
தமிழக அரசு சார்பில் இருவருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. சென்னை விமானநிலையம் முதல் மாமல்லபுரம் வரை 34 இடங்களில் சிறப்பு வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12 வகை நிகழ்ச்சிகள்
தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பறைச்சாற்றும் வகையில் பரத நாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், தேவராட்டம், கை சிலம்பம், மங்கள இசை உள்பட 12 வகையான கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் கலை மற்றும் பண்பாட்டு துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 12 வகையான கலைநிகழ்ச்சிகளுக்காக தமிழகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் குழுவினர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் கடந்த 2 நாட்களாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அவர்களது ஒத்திகை நடைபெற்று வருகிறது.
500 கலைஞர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியை கண் கவர் வண்ணமாக மாற்ற அந்ததந்த கலைகளுக்கு ஏற்றாற்போல் வண்ணமயமான சிறப்பு உடைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 500 கலைஞர்களும் தொடர்ந்து இன்றும்(வியாழக்கிழமை) ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.
Related Tags :
Next Story