மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் தொடங்கப்படும்
கிடப்பில் இருக்கும் மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை துறைமுகத்தில் துறைமுக தின விழா நேற்று நடந்தது. துறைமுக தலைவர் பி.ரவீந்திரன் விழாவுக்கு தலைமை தாங்கினார். விழாவில் காந்தியடிகள் தொடர்பான புத்தகத்தை சென்னை சரக்கு மற்றும் சேவை வரிகள் துறை முதன்மை ஆணையர் ஹேமாவதி வெளியிட்டார்.
விழாவில் கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்
விழாவில் துறைமுக தலைவர் பி.ரவீந்திரன் பேசியதாவது:-
சென்னை துறைமுகத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஒரு கட்டமாக கப்பல் நிறுத்தும் தளத்தில் 11.5 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டு கப்பல் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஆந்திர மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கியா மோட்டார் நிறுவனம் சென்னை துறைமுகத்துடன் 10 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதேபோல் ஹூண்டாய் மோட்டார் நிறுவனமும் கார் ஏற்றுமதிக்காக துறைமுகத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது.
நவீன கருவிகள்
கனரக வாகனங்களில் துறைமுகத்துக்கு கொண்டு வரப்படும் சரக்கு பெட்டகங்களை சோதனையிட தானியங்கி மூலம் பதிவு செய்யும் நவீன கருவிகள் துறைமுக வாசலில் அமைக்கப்பட்டு வருகிறது. இவை இந்த மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும். துறைமுகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு வருகிறது.
பசுமை துறைமுகமாக மாற்றுவதற்காக அடுத்த 2 நாட்களில் 2,100 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. பல்வேறு காரணங்களால் கிடப்பில் கிடக்கும் மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் தொடர்பான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்பட்டு உள்ளது. மீண்டும் தொடங்கப்பட உள்ள இந்த திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி இந்த ஆண்டு இறுதிக்குள் கோரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story