‘டிஜிட்டல்’ முறையில் பொருளாதார கணக்கெடுப்பு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்


‘டிஜிட்டல்’ முறையில் பொருளாதார கணக்கெடுப்பு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Oct 2019 4:00 AM IST (Updated: 10 Oct 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வீடுகள், நிறுவனங்களில் ‘டிஜிட்டல்’ முறையில் பொருளாதார கணக்கெடுப்பு பணியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.

சென்னை,

இந்தியா முழுவதும் மக்கள் பொருளாதாரத்தில் என்ன நிலையில் உள்ளனர்? என்பதை மத்திய அரசு அறிந்து கொள்ளும் வகையில் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வீடு மற்றும் நிறுவனங்களில் பொருளாதார அடிப்படையில் கணக்கெடுக்கும் பணியை 1977-ம் ஆண்டில் இருந்து மேற்கொண்டு வருகிறது. 6-வது முறையாக 2013-ம் ஆண்டு கடைசியாக இந்த கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

டிஜிட்டல் முறையில்....

தற்போது 7-வது முறையாக மிக துல்லியமாக கணக்கெடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு செல்போன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் இந்த கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொருளாதார அடிப்படையிலான கணக்கெடுப்பு பணி தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

தேசிய புள்ளியியல் துறை துணை தலைமை இயக்குனர் எஸ்.துரைராஜு வரவேற்றார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செல்போன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பொருளாதார கணக்கெடுப்பு பணியை தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர், தனது விவரங்களை செயலியில் பதிவு செய்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

27½ கோடி வீடுகள்-5½ கோடி நிறுவனங்கள்

இந்த கணக்கெடுப்பில் 27.5 கோடி வீடுகள் மற்றும் 5.5 கோடி நிறுவனங்கள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கெடுப்பின்போது வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள், தொழில்நிறுவனங்களின் நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்களின் எந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் முதலீடு, ஆண்டு வருமானம் ஆகியவை சேகரிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட உள்ளன.

இதன்மூலம் தேசிய, மாநில மற்றும் உள்ளாட்சி அளவில் முக்கிய பொருளாதார கொள்கை முடிவுகளை எடுக்க முடியும்.

மத்திய அரசு திட்டங்கள்

வேலைவாய்ப்பை பொறுத்தமட்டில் நிரந்தர, ஒப்பந்த பணியாளர்கள் எவ்வளவு பேர் வேலையில் உள்ளனர் என்ற விவரத்தையும், எந்தெந்த வயதினர் பணியில் உள்ளனர் என்பதையும் இந்த கணக்கெடுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்குகிறது. பொருளாதாரத்தில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டிஸ், ஸ்கில் இந்தியா, அனைவருக்கும் வீட்டு வசதி மற்றும் ஸ்டார்ட்-அப் இந்தியா ஆகிய மத்திய அரசின் திட்டங்கள் இந்த இலக்கை அடைய முக்கிய காரணங்கள் ஆகும்.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

இந்த கணக்கெடுப்பு பணி 3½ மாதங்கள் நடைபெறும். இந்த பணியில் 12 லட்சம் பேர் ஈடுபடுகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணியின் போது சரியான தகவல்களை அளித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் மத்திய அரசு உரிய நேரத்தில் சரியான கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரகசியம் காக்கப்படும்

நிகழ்ச்சியில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை செயலாளர் பிரவீன் ஸ்ரீவஸ்தவா, தேசிய புள்ளியியல் துறை துணை தலைமை இயக்குனர் ஏ.கே.தோப்ரானி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முடிவில், மத்திய அரசின் இ-சேவை தலைமை செயல் அதிகாரி வினோத் குரியகோஸ் நன்றி கூறினார்.

இந்த கணக்கெடுப்பின் போது பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தும் ரகசியம் காக்கப்படும் என்றும், எந்த சூழ்நிலையிலும் தனிநபர், நிறுவனங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படாது என்றும் புள்ளியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story