மோடி, சீன அதிபர் சந்திப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்


மோடி, சீன அதிபர் சந்திப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Oct 2019 3:39 AM IST (Updated: 10 Oct 2019 3:39 AM IST)
t-max-icont-min-icon

நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

சென்னை,

பிரதமர் நரேந்திரமோடி- சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், பா.ஜ.க. கலந்தாய்வு கூட்டம் சென்னை கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத்தலைவர் அரசக்குமார், சென்னை மாவட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரமாண்ட வரவேற்பு

கூட்டத்தில், மோடி, ஜின்பிங் ஆகியோருக்கு சாலை மார்க்கமாக 32 இடங்களில் எவ்வாறு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது?, இந்திய, சீன கொடியை அசைத்து அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது எப்படி? என்பது போன்ற பல்வேறு கருத்துகள் பேசப்பட்டன.

மேலும், 100 படகுகள் மூலம் கொட்டிவாக்கத்தில் இருந்து மாமல்லபுரத்துக்கு கடல் வழியாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். குறிப்பாக கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்களை இந்த பிரமாண்ட வரவேற்பில் ஈடுபடுத்துவதை முக்கிய நோக்கமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

பிரசார வாகனம்

அதுமட்டுமில்லாமல் பா.ஜ.க. சார்பில் இருபெரும் தலைவர்கள் சந்திப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்காக 5 வாகனங்கள் பிரசாரக்குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரசார வாகனங்களை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) வலம் வர உள்ளது.

Next Story