மாநில செய்திகள்

மாமல்லபுரத்தில்63 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வரலாற்று சந்திப்புருசிகர தகவல்கள் + "||" + Mamallapuram A historic meeting again 63 years later

மாமல்லபுரத்தில்63 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வரலாற்று சந்திப்புருசிகர தகவல்கள்

மாமல்லபுரத்தில்63 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வரலாற்று சந்திப்புருசிகர தகவல்கள்
மாமல்லபுரத்தில் 63 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வு அரங்கேற இருக்கிறது. இதில் பல ருசிகர தகவல்களும் அடங்கி இருக்கிறது.
சென்னை,

‘செய்நன்றி மறவா பண்பு’, எப்போதுமே தமிழர்களுக்கு உரித்தானது. சங்ககாலம் தொட்டே அதற்கான பல்வேறு சான்றுகள் வரலாற்றில் உண்டு. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது, மாமல்லபுரம்.

தற்போது பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி, மாமல்லபுரம் களைகட்டி இருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புதான் பரபரப்பு செய்தியாக இருக்கிறது. ஆனால் இந்த மாமல்லபுரம் ஏற்கனவே இதேபோல ஒரு வரலாற்று நிகழ்வை 63 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்து இருக்கிறது.

அந்த சம்பவம் இன்றும் அங்குள்ள மக்கள் மனதில் நிழலாடுகிறது.

குழிப்பாந்தண்டலம் ஊராட்சி

மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் வழியில் அமைந்திருப்பது குழிப்பாந்தண்டலம் ஊராட்சி. 1950-ம் ஆண்டுகளில் இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் வீரராகவாச்சாரி. குழிப்பாந்தண்டலம் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை இவர் செய்து தந்திருக்கிறார். பள்ளிக்கூடம், ரேடியோ மையம், விளையாட்டு மைதானம் என ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

அந்தவகையில் குழிப்பாந்தண்டலத்தையே முன்மாதிரி கிராமமாக மாற்றிக்காட்டி இருக்கிறார். இதற்காக 1954-ம் ஆண்டு சென்னை மெரினாவில் நடந்த விழாவில் அப்போதைய பிரதமர் நேரு இவருக்கு விருதும், ரூ.1,000 சன்மானமும் வழங்கி கவுரவித்திருக்கிறார். அந்த சன்மான தொகையை கொண்டும், தனது சொத்தின் ஒரு பகுதியை விற்றும் குழிபாந்தண்டலம் அக்ரஹாரம் தெருவில் ஒரு பிரசவ ஆஸ்பத்திரியை கட்டினார்.

சீன பிரதமர் வருகை

அந்த சமயம் மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட சீன பிரதமர் சூ என்லாய் வருகை தந்தார். எனவே, தான் கட்டிய பிரசவ ஆஸ்பத்திரியை சூ என்லாய் திறந்துவைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, அரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோள், சென்னை வந்த சீன பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார்.

அந்தவகையில் 1956-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி குழிபாந்தண்டலத்தில் 3 அறைகள் கொண்ட பிரசவ ஆஸ்பத்திரியை சீன பிரதமர் சூ என்லாய் திறந்து வைத்தார். இதன் நினைவாக ஒரு கல்வெட்டும் ஆஸ்பத்திரி சுவரில் அமைக்கப்பட்டது. இந்த விழாவை தொடர்ந்து அந்த பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சூ என்லாய் வழங்கினார். விவசாயிகளுக்கு தனது சொந்த பணத்தில் உதவிகளும் செய்தார்.

சீனாக்காரன் ஆஸ்பத்திரி

சூ என்லாய் திறந்து வைத்ததாலேயே அந்த பிரசவ ஆஸ்பத்திரி ‘சூன்லா ஆஸ்பத்திரி’ என்றும், ‘சீனாக்காரன் ஆஸ்பத்திரி’ என்றும் வெகுகாலம் அழைக்கப்பட்டு வந்துள்ளது. வீரராகவாச்சாரி மறைவுக்கு பிறகு அந்த ஆஸ்பத்திரி பராமரிப்பின்றி, ஒருகட்டத்தில் சிதிலமடைந்து போனது. அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் கழிப்பிடமாக பயன்படுத்தும் அளவுக்கு இந்த கட்டிடம் அவல நிலைக்கு சென்றது.

இதையடுத்து இந்த ஆஸ்பத்திரி கட்டிடத்தை மீண்டும் சீரமைக்க அந்த பகுதி மக்கள் முடிவெடுத்தனர். இதையடுத்து கடந்த 2008-ம் ஆண்டு செங்கல்பட்டு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பாழடைந்த இந்த கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்பட்டு, அதே இடத்தில் ரூ.6½ லட்சத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது. ஆனாலும் இந்த ஆஸ்பத்திரி ‘சீனாக்காரன் ஆஸ்பத்திரி’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.காலங்கள் உருண்டோடினாலும்...

இந்தநிலையில் 63 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், சீனாவின் அதிபர் மாமல்லபுரத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள மாமல்லபுரம் மக்களும் தயாராக இருக்கிறார்கள்.

என்னதான் காலங்கள் உருண்டோடினாலும் இன்னும் சீனா பிரதமர் குறித்த நினைவுகளை அங்குள்ள மக்கள் மறக்கவில்லை. அவர் செய்த உதவிகளையும் மறக்கவில்லை. இப்போதுள்ள தலைமுறை குழந்தைகளுக்கு கூட அதைப்பற்றி பெற்றோர் சொல்லி கொடுத்திருக்கிறார்கள். இதனால் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூ என்லாயின் பெயரை மீண்டும் மாமல்லபுரம் மக்கள் உச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

இதுகுறித்து குழிப்பாந்தண்டலத்தை சேர்ந்த ஸ்தலசயனம் (வயது 85) என்பவர் கூறியதாவது:-

முன்னோர் பெருமை

எனது சித்தப்பா வீரராகவாச்சாரியர் கட்டிய கட்டிடத்தை சூ என்லாய் திறந்து வைத்ததைத்தான் ஊர்மக்கள் பல நாட்கள் பேசிக்கொண்டிருந்தனர். அவர் செய்த உதவிகளையும் யாரும் மறக்கவில்லை. சீன பிரதமர் சூ என்லாய், அமெரிக்காவை சேர்ந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர், காமன்வெல்த் கூட்டு சபையின் செயலாளர் ஹோவர்டு டெக்வில்லே உள்பட பல வெளிநாட்டு பிரபலங்கள் குழிபாந்தண்டலத்துக்கு வந்துள்ளனர். 63 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வாக சீன அதிபர் மாமல்லபுரம் வருகிறார். எனவே அவர் குழிப்பாந்தண்டலத்துக்கு வந்து, அவர்களின் முன்னோர் பெருமையை நினைவுகூர்வது சிறப்பாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சூ என்லாய் நினைவாக...

குழிப்பாந்தண்டலத்தை சேர்ந்த மூதாட்டி காமாட்சி என்பவர் கூறுகையில், “சீனாக்காரன் ஆஸ்பத்திரியில் பிறக்கும் முதல் குழந்தைக்கு சூ என்லாய் பெயரை சூட்டத்தான் மக்கள் பிரியபட்டார்கள். ஆனால் புரியாத பெயரால் எதிர்காலத்தில் பிரச்சினை வரக்கூடாது என்று கருதினார். ஆனாலும் சூ என்லாய் நினைவாக ‘சு’ எனும் எழுத்தில் தொடங்கும் சுந்தரம், சுப்புத்தாய், சுடர்க்கொடி போன்ற பெயர்களை குழந்தைகளுக்கு சிலர் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்? என்பது தெரியவில்லை” என்றார்.


தமிழில் பேச முடியாததற்கு வருத்தம்

குழிப்பாந்தண்டலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர், சென்னையில் நடந்த விழாவில் சூ என்லாய் பங்கேற்றார். கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர் ஆங்கிலத்தில் பேசுகையில், “இந்தியா போலவே சீனாவிலும் சுதந்திர போராட்டத்தில் மாணவர்களின் பங்கு அளப்பரியது. தமிழகத்துக்கு வந்துள்ளேன். ஆனால் என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இப்போது என்னுடன் வந்த யாருக்குமே தமிழ் தெரியாது. ஆனால் அடுத்தமுறை நான் தமிழகம் வரும்போது நிச்சயம் தமிழ் மொழி தெரிந்தவர்களை என்னுடன் அழைத்து வருவேன்” என்று குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு சூ என்லாய் சென்று பார்வையிட்டார். முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் இல்லத்துக்கு சென்று, அவரது மனைவி இறப்புக்கு துக்கம் தெரிவித்தார். அத்துடன், தமிழக சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அவர் டெல்லி புறப்பட்டார்.