மாநில செய்திகள்

சீன அதிபர் ஜின்பிங் நாளை வருகைசென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை 34 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு49 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள் + "||" + Chinese President Xi Jinping arrives tomorrow

சீன அதிபர் ஜின்பிங் நாளை வருகைசென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை 34 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு49 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்

சீன அதிபர் ஜின்பிங் நாளை வருகைசென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை 34 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு49 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்
சீன அதிபர் ஜின்பிங் நாளை சென்னை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 34 இடங்களில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் 49 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.
சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேச இருக்கிறார்கள்.

நாளை சென்னை வருகை

இதற்காக அவர்கள் இருவரும் நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார்கள்.

ஜின்பிங்குடன் 200 பேர் கொண்ட சீன உயர் அதிகாரிகள் குழுவும் சென்னை வருகிறது. ஜின்பிங் பயணம் செய்வதற்காக சீனாவில் இருந்து விமானம் மூலம் குண்டு துளைக்காத 4 அதிநவீன கார்கள் நேற்று முன்தினம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. ஜின்பிங் பயணம் செய்யும் ‘ஹாங்கி எல்-5’ ரக கார் 20 அடி நீளம், 2 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் உயரம் கொண்டது.

இந்த காரில், பயணம் செய்யும்போது தங்கு தடையின்றி பேசும் வகையில் நவீன தொலைத்தொடர்பு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன. 408 குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 10 வினாடிகளில் இந்த காரில் 100 கி.மீ. வேகத்தை எட்ட முடியும்.

ஜின்பிங் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்வதை பாதுகாப்பானதாக சீன அதிகாரிகள் கருதவில்லை. இதனால் அவர் காரில் மாமல்லபுரம் செல்கிறார். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

34 இடங்களில் வரவேற்பு

சென்னை வரும் சீன அதிபர் ஜின்பிங்கை விமானநிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்கிறார்கள். விமானநிலைய வளாகத்துக்குள் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. விமான நிலையத்தில் இருந்து ஜின்பிங் வரும் வழியில் கத்திப்பாரா சந்திப்பு, கிண்டி சந்திப்பிலும் பாரம்பரிய நடனங்கள் நடைபெற உள்ளன.

சென்னை விமானநிலையம் தொடங்கி மாமல்லபுரம் வரை 34 இடங்களில் அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 49 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள்.

அதிகாரபூர்வ தகவல்

பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங் சந்திப்பு தொடர்பான விவரங்கள் அடங்கிய அதிகாரபூர்வ தகவல் நேற்று வெளியானது.

அதன்படி, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 12.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கிறார். இதற்காக அங்கு ‘ஹெலிபேட்’ தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் கார் மூலம் கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்’ நட்சத்திர ஓட்டலுக்கு மோடி செல்கிறார்.

இந்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங் மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமானநிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிரண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 1.45 மணிக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்கிறார்.

மோடி வரவேற்கிறார்

பின்னர் மாலை 4 மணிக்கு கிண்டியில் இருந்து கார் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதியை சென்று அடைகிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

பின்னர் அவர்கள் இருவரும் சிற்பங்களை பார்த்து ரசித்தபடி, நடந்து சென்றவாறு பேசுகிறார்கள். அப்போது அவர்கள் கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறையையும் பார்வையிடுகிறார்கள். பின்னர் கார் மூலம் இருவரும் ஐந்துரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று சுற்றி பார்க்கிறார்கள். அங்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதனை இருவரும் பார்வையிடுகிறார்கள். அங்கேயே இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பின்னர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் இருந்து கார் மூலம் கிண்டி ஐ.டி.சி. கிரண்ட் சோழா ஓட்டலுக்கு வருகிறார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்’ ஓட்டலுக்கு செல்கிறார்.

பேச்சுவார்த்தை

கிண்டி நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கும் சீன அதிபர் ஜின்பிங் 12-ந்தேதி (நாளை மறுதினம்) காலை 9.05 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தங்கி இருக்கும் ஓட்டலுக்கு செல்கிறார். காலை 9.50 மணிக்கு அவர் ஓட்டலை சென்று அடைகிறார்.

அங்கு போய்ச் சேர்ந்ததும் அவரும் மோடியும் 10 நிமிடம் நேரம் ஒன்றாக நடந்து சென்று ஓட்டலில் உள்ள ஒரு அறையில் காலை 10 மணி முதல் 10.40 மணி வரை தேனீர் அருந்தியவாறு தனியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். அரசுமுறை அல்லாத இந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா-சீனா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் 10.50 மணி முதல் 11.40 மணி வரை அந்த ஓட்டலில் உள்ள மற்றொரு அறையில் இருவரின் தலைமையில் இருநாட்டு உயர் மட்ட குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதனைதொடர்ந்து 2 பேரும் பேசிக்கொண்டே மதிய உணவு சாப்பிடுகிறார்கள்.

அதன்பிறகு ஜின்பிங் தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, மதியம் 12.45 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு 1.25 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து அவர் தனிவிமானம் மூலம் 1.35 மணிக்கு நேபாளம் புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி மதியம் 2 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சீன அதிபர் ஜின்பிங்கின் வருகையையொட்டி சென்னையிலும், மாமல்லபுரத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரையிலும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 800 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.