டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு அவசரமாக தரை இறங்கியதால் 114 பேர் உயிர் தப்பினர்
டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் அவசரமாக தரை இறங்கியதால் 114 பேர் உயிர் தப்பினர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு டெல்லியில் இருந்து விமானம் வந்தது. அதில் 108 பயணிகளும், 6 ஊழியர்களும் என 114 பேர் இருந்தனர். சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் தரை இறங்க தயாரானபோது, விமானத்தின் இறக்கை பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சக்கரங்கள் இயங்கவில்லை.
இதனால் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். விமானத்தை சென்னையில் அவசரமாக தரை இறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டன. அதுவரை விமானம் வானில் தொடர்ந்து வட்டமடித்தது. பின்னர் விமானம் அவசரமாக தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது.
114 பேர் உயிர் தப்பினர்
அதைத்தொடர்ந்து விமானம், சென்னையில் அவசரமாக பத்திரமாக தரை இறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த 114 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டெல்லியில் இருந்து வந்த அந்த விமானம் மீண்டும் சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் விமானத்தின் இறக்கையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்தபின் சுமார் 3 மணி நேர தாமதமாக அந்த விமானம் மதுரைக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
விமானத்தின் இறக்கை பகுதியில் பழுது ஏற்பட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story