‘பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவேண்டும்’ தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்


‘பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவேண்டும்’ தமிழக மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
x
தினத்தந்தி 10 Oct 2019 5:15 AM IST (Updated: 10 Oct 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திப்பது தமிழ்நாட்டுக்கு பெருமை என்றும், எனவே பொதுமக்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்றும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தின் பெருமை

இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை, தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கிறது.

அதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலுள்ள மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், தமிழ்நாடு அரசின் சார்பாகவும் இவ்விரு உலகத் தலைவர்களையும் வரவேற்கிறேன்.

கடல் வழி வியாபாரம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வணிக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், சீனாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்பது வரலாறு. பண்டைய சீன நாட்டின் தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்பதும், அக்காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லபுரம், இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது என்றும் கருதுகிறேன்.

சீன நாட்டுடன் கடல் வழி வியாபாரம் மாமல்லபுரம் வழியாக நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது. அதேபோல், சோழர்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடர்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும்.

வரலாற்று தொடர்ச்சி

ஏற்கனவே 1956-ம் ஆண்டு, சீன நாட்டு பிரதமர் சூ என் லாய், மாமல்லபுரம் அருகிலுள்ள குழிப்பான்தண்டலம் கிராமத்திற்கு வருகை தந்ததை இங்கே நினைவு கூர விரும்புகிறேன்.

இந்த இரு தலைவர்களின் சந்திப்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது, பண்டைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேண்டுகோள்

சீன அதிபரின் வருகை, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story