எனது பரோல், விடுதலையை தடுக்க சதி நடக்கிறது முருகன் பேட்டி


எனது பரோல், விடுதலையை தடுக்க சதி நடக்கிறது முருகன் பேட்டி
x
தினத்தந்தி 31 Oct 2019 9:31 PM GMT (Updated: 31 Oct 2019 9:31 PM GMT)

எனது பரோல் மற்றும் விடுதலையை தடுக்க திட்டமிட்டு சதி நடக்கிறது என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் கூறினார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் அறையில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து அவருக்கு சிறையில் அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டது. முருகன் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டார். இதனால் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக முருகனை நேற்று போலீசார் வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்திருந்தனர். முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு நிஷா ஒத்திவைத்தார்.

அதைத்தொடர்ந்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறையில் அதிகாரிகளுக்கு தெரியாமல் மூச்சுக்காற்றுக் கூட விட முடியாது. அப்படி இருக்கும்போது அவர்களுக்கு தெரியாமல் எப்படி எனது அறைக்கு செல்போன் வரும். அதற்கு வாய்ப்பில்லை. இதன் மூலம் எனது பரோல் மற்றும் விடுதலையை தடுக்க திட்டமிட்டு சதி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் போலீஸ் காவலுடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Next Story