அரசின் நடவடிக்கை குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை: கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் டாக்டர்கள் சங்கம் அறிவிப்பு
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,
4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 25-ந்தேதி முதல் உண்ணாவிரதம், வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் முதலில் 5 டாக்டர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேலும் 3 பேர் போராட்டத்தை தற்போது தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், சங்கத்தினரை அரசு அழைத்து பேசும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் அரசு ‘அங்கீகாரம் பெற்ற சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது. எனவே போராட்டத்தில் ஈடுபடுவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்’ என கோரிக்கை விடுத்தது.
7-வது நாளாக நீடிப்பு
நேற்று முன்தினம் இரவு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ‘போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்கள் இடத்துக்கு புதிய டாக்டர்கள் நியமிப்படுவார்கள்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால் இதை பொருட் படுத்தாமல் நேற்று 7-வது நாளாக டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். ஒரு சிலர் போராட்டத்தில் இருந்து விலகி மீண்டும் பணிக்கு திரும்பினாலும், கையெழுத்து போடாமல் பணியில் இருந்தனர்.
நேற்று பிற்பகல் 2 மணி வரை கெடு விதித்திருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த டாக்டர்கள் பணிக்கு திரும்பாமல் இருந்தனர்.
வைகோ, சீமான் ஆதரவு
இதுபற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி டாக்டர் ஆண்டன் கூறுகையில், ‘அரசு எங்களை அழைத்து பேசி எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உறுதியளிக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும். அரசு இதுபோன்று மொத்தமாக டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது சட்டத்தில் இடமில்லாத ஒன்று. ஆகவே அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம்’ என்றார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் நேற்று நேரடியாக போராட்ட களத்துக்கு வந்து டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story