வரி ஏய்ப்பு புகார் - உடல் எடை குறைப்பு மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை


வரி ஏய்ப்பு புகார் - உடல் எடை குறைப்பு மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 1 Nov 2019 8:30 AM GMT (Updated: 1 Nov 2019 8:30 AM GMT)

வரி ஏய்ப்பு புகார் தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.

சென்னை

உடல் ஆரோக்கிய குழும நிறுவனத்துக்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை  நடைபெறுகிறது. தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா   மாநிலங்களில் சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு எடைக் குறைப்பு சிகிச்சை என்ற பெயரில் பிரபலமாகியுள்ள நிறுவனம், கலர்ஸ் ஹெல்த்கேர். உடல் எடை குறைப்பு சிகிச்சையை பிரபலப்படுத்த, நடிகைகளை வைத்து விளம்பரம் செய்து வரும் இந்நிறுவனத்திற்கு, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிகிச்சை மையங்கள் உள்ளன.

புதுச்சேரியிலும் தமிழகத்தில் கோவை, திருச்சி, வேலூரிலும் இந்த மையங்கள் உள்ளன. சென்னையில் தியாகராய நகர், அண்ணா நகர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் கலர்ஸ் உடல் எடைக்குறைப்பு சிகிச்சை மையங்கள் உள்ளன. இந்நிலையில், வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை தொடங்கி இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கலர்ஸ் உடல் எடைக் குறைப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் கிருஷ்ணா தேவுலா, அவரது உறவினரும் நடிகையுமான மந்த்ரா ஆகியோரது ஐதராபாத் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

மூன்றாவது நாளாக நீடித்து வரும் இந்த சோதனையில் வரி ஏய்ப்புக்கு ஆதாரமாக பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் விஜய் கிருஷ்ணா உள்ளிட்டோரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Next Story