பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி: கலவரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் 18 விஜய் ரசிகர்கள் கைது


பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி:  கலவரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் 18 விஜய் ரசிகர்கள் கைது
x
தினத்தந்தி 1 Nov 2019 11:16 AM GMT (Updated: 1 Nov 2019 11:16 AM GMT)

கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியானபோது கலவரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் 18 விஜய் ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 25-ம் தேதி  வெளியானது. இந்த படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்த நிலையில்  இரவு சிறப்பு காட்சிக்கு அனுமதித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே பெங்களூரு சாலையில் ஒரு தியேட்டரிலும், சென்னை சாலையில் மற்றொரு தியேட்டரிலும், பழையபேட்டையில் உள்ள ஒரு தியேட்டரிலும் ‘பிகில்’ படம் திரையிடப்பட்டிருந்தது. ஓசூரில் படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  திரையிடப்படவில்லை.

இதனால் ஓசூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான  ரசிகர்களும், கிருஷ்ணகிரி ரசிகர்களும் இரவு 1 மணி அளவில் கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் திரண்டனர். அவர்கள் ‘பிகில்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு சென்று எப்போது திரையிடப்படும் எனக் கேட்டனர். அப்போது சிறப்பு காட்சிக்கு அனுமதி வந்தபோதிலும், படம் ஒளிபரப்ப சற்று நேரம் ஆகும் என தியேட்டர் ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள், தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை சாலையில் உள்ள தியேட்டர் ஒன்றின் கண்ணாடிகளை சில ரசிகர்கள் உடைத்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சிக்னல்களை கற்களை வீசி உடைத்தனர். போலீஸ் ஒலிபெருக்கியை உடைத்து சேதப்படுத்தினார்கள்.

சாலையோரமாக வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகளை (பேரிகாடு) நடுரோட்டில் தூக்கி போட்டு உடைத்தனர். இதைத் தவிர அந்த பகுதியில் உள்ள கடைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், போர்டுகளை உடைத்து எறிந்து, சாலையின் நடுவில் போட்டு தீ வைத்து எரித்தனர். சாலையோர வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த பானைகள், பொருட்களை நடுரோட்டில் போட்டு உடைத்து கடைகளை சூறையாடினர்.

இதைத் தவிர வாகன ஓட்டிகளை கண்காணிப்பதற்காக போலீசார் வைத்திருந்த உயர மேடையை நடுரோட்டில் சாய்த்தனர். இதேபோல நகராட்சி சார்பில் சாலையோரம் பொதுமக்கள் வசதிக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியை போட்டு உடைத்து நடுரோட்டில் உருட்டி விளையாடினார்கள். இதனால் அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

இதேபோல கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகிலும் ரசிகர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள செல்போன் கடைகளின் பேனர்கள், போர்டுகளை கிழித்து நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர். சாலை முழுவதும் கற்களை வீசியும், பாட்டில்களை போட்டும் ரகளையில் ஈடுபட்டனர். பழைய பேட்டை செல்லும் சாலையில் உள்ள தியேட்டர் முன்பும் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அந்த நேரம் போலீசார் மிக குறைவான எண்ணிக்கையிலேயே அப்பகுதியில் இருந்ததால் அவர்களால் வன்முறையில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இது குறித்து அங்கிருந்த போலீசார் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதி விரைவுப்படை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டினார்கள். இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான வீடியோக்களை கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினார்கள். அதன்படி வன்முறையில் ஈடுபட்டதாக கிருஷ்ணகிரி நகர விஜய் ரசிகர் மன்ற மாணவர் அணி அமைப்பாளர் அரவிந்தன் (வயது 19), மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தமிழரசு (25) உள்பட 30 பேரை கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கடந்த 26-ம் தேதி  கைது செய்து சிறையில் அடைந்தனர். 

இந்தநிலையில்,  கடந்த 25ம் தேதி பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியானபோது கலவரத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் 18 விஜய் ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story