‘தூய்மையே சேவை’ திட்டத்தின் மூலம் கூவம் ஆற்றை சுத்தம் செய்யும் பணியை கவர்னர் தொடங்கி வைத்தார்


‘தூய்மையே சேவை’ திட்டத்தின் மூலம் கூவம் ஆற்றை சுத்தம் செய்யும் பணியை கவர்னர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Nov 2019 3:00 AM IST (Updated: 2 Nov 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

தூய்மையே சேவை திட்டத்தின் மூலம் கூவம் ஆற்றை சுத்தம் செய்யும் பணியை நேற்று கவர்னர் தொடங்கி வைத்தார்.

சென்னை,

இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தேசிய பேரிடர் மீட்பு பணித்துறை சார்பில் ‘தூய்மையே சேவை’ என்ற திட்டத்தின் மூலம் நேற்று சென்னை நேப்பியர் பாலம் கூவம் ஆற்றின் கரையோரத்தில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் பேரிடர் மீட்பு படையினரின், மீட்பு பணி உபகரணங்கள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருந்ததை கவர்னர் பார்வையிட்டார்.

இதையடுத்து, கூவம் ஆற்றின் கரையோரத்தில் சேறும் சகதியுமான இடத்தில் கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் கவர்னர் ஈடுபட்டார். மேலும் அவருடன் இணைந்து மீட்பு படையினர் ரப்பர் படகு மூலம் கூவம் ஆற்றில் மிதந்து வந்த குப்பைகளையும் அகற்றி சுத்தம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு படை, சி.ஐ.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., என்.சி.சி., சென்னை மாநகராட்சி, செஞ்சிலுவை சங்கம், சவிதா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு கூவம் ஆற்றை தூய்மைப்படுத்தினர். மேலும், இதேபோல் கோயம்பேடு, அண்ணாநகர், நுங்கம்பாக்கம், மேத்தாநகர், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்பட 11 இடங்களில் ‘தூய்மையே சேவை’ திட்டத்தின் மூலம் கூவம் ஆற்றை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அண்ணா அரங்கத்தில் தேசிய பேரிடர் மீட்பு பணித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தேசிய மீட்பு படை இயக்குனர் பிரதான், தென் மண்டல தேசிய மீட்பு படை டி.ஐ.ஜி. சிங், சுற்றுச்சூழல் ஆர்வலர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது, மாதந்தோறும் 2 முறை, தொடர்ந்து சில மாதங்கள் கூவம் ஆறு சுத்தம் செய்யும் பணி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Next Story