மாநில செய்திகள்

மழைநீர் ஒழுகியதால் ஆத்திரம்: தென்னங்கீற்றால் அரசு பஸ்சுக்கு கூரை அமைத்து நூதன போராட்டம் + "||" + Because of the rainwater runoff For the government bus Roof set up a new protest

மழைநீர் ஒழுகியதால் ஆத்திரம்: தென்னங்கீற்றால் அரசு பஸ்சுக்கு கூரை அமைத்து நூதன போராட்டம்

மழைநீர் ஒழுகியதால் ஆத்திரம்: தென்னங்கீற்றால் அரசு பஸ்சுக்கு கூரை அமைத்து நூதன போராட்டம்
அரசு பஸ்சில் மழைநீர் ஒழுகியதால் ஆத்திரம் அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், அந்த பஸ்சுக்கு தென்னங்கீற்றுகளால் கூரை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து இன்னம்பூர் வழியாக திருப்புறம்பியம் வரை தினமும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு கிராமங்கள் வழியாக செல்லும் இந்த பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், விவசாய தொழிலாளர்கள் பயணம் செய்து வருகிறார்கள்.


பஸ்களின் மேற்கூரையில் ஓட்டை இருந்ததால் மழைநீர் ஒழுகி பயணிகள் அவதிப்படும் நிலை இருந்து வருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று இன்னம்பூர் வந்த அரசு பஸ் ஒன்றை வழிமறித்து அதற்கு தென்னங்கீற்றுகளால் கூரை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு பஸ்சை சரிவர பராமரிக்காத போக்குவரத்துக்கழக அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சுவாமிமலை போலீசார், மற்றும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த வழித்தடத்தில் புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இன்னம்பூர்-திருப்புறம்பியம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.