‘இயலும், இசையும் இணைந்தது’ நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜா-பாரதிராஜா சந்திப்பு வைகை அணையில் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி
நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையராஜாவும், பாரதிராஜாவும் வைகை அணையில் சந்தித்து மகிழ்ச்சி பொங்க புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தேனி,
தமிழ் திரையுலகில் அடுக்கடுக்காக பல வெற்றிகளை கொடுத்தவர்கள் இயக்குனர் பாரதிராஜா, ‘இசைஞானி’ இளையராஜா ஆகிய இருபெரும் ராஜாக்கள். இந்த ராஜாக்களின் கூட்டணி ராஜ்ஜியத்தால் பல படங்கள் பிரமாண்ட வெற்றி பெற்றன.
‘16 வயதினிலே’ படத்தில் தொடங்கி, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரெயில், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை என காலத்தால் அழியாத பல காவியங்களை இவர்களின் வெற்றி கூட்டணி தமிழ் திரையுலகிற்கு தந்தது.
இவர்கள் இருவரும் இணைந்து கொடுத்த முதல் திரைப்படம் ‘16 வயதினிலே’ என்பதாகும். ஆனால், அதற்கு முன்பு இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பாரதிராஜா தேனி அல்லிநகரத்தில் பிறந்தவர். இளையராஜா பண்ணைப்புரத்தை சேர்ந்தவர்.
வைகை அணையில் சந்திப்பு
நீண்ட கால நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்களுக்கு இடையே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சிறு மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு 2 பேரும் சந்திக்காமல் இருந்தனர்.
இந்தநிலையில், இளையராஜாவும், பாரதிராஜாவும் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு தேனி மாவட்டம், வைகை அணை பகுதியில் நிகழ்ந்துள்ளது. 2 பேரும் மதுரைக்கு தனித்தனி காரில் சென்று விட்டு, திரும்பி வந்த போது வைகை அணைக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்து, ஒரே காருக்குள் அமர்ந்து மகிழ்ச்சி பொங்க புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதையடுத்து, பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், இளையராஜாவுடன் எடுத்த 3 புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில், ‘இயலும், இசையும் இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது... என் தேனியில்’ என்று அவர் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story