தமிழ்நாடு முழுவதும் பேரிடர் விழிப்புணர்வு முகாம் மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நாளை தொடங்கி வைக்கிறார்


தமிழ்நாடு முழுவதும் பேரிடர் விழிப்புணர்வு முகாம் மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நாளை தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 9:36 PM GMT)

பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இதனை மதுரையில் நாளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இதனை மதுரையில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைக்கிறார். நிகழ்ச்சிக்கு வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். அதனைத்தொடர்ந்து முதல்கட்டமாக 5-ந்தேதி திருச்சியிலும், 6-ந்தேதி சென்னையிலும், 7-ந்தேதி திருவள்ளூரிலும், 8-ந்தேதி காஞ்சீபுரத்திலும் விழிப்புணர்வு முகாம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்த விழிப்புணர்வு முகாமில் நீர்நிலைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் வெள்ளம், புயல், தீ விபத்து, நிலநடுக்கம், மின்னல் போன்ற பேரிடர்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு மீட்பு துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஆம்புலன்ஸ், செஞ்சிலுவை சங்கம் மற்றும் நேரு யுவகேந்திரா போன்ற துறைகள் சார்பில் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

வருவாய் ஆணையர் சுற்றறிக்கை

இதுதொடர்பாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக கமிஷனர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் மதுரை, திருச்சி, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்கள், டி.ஜி.பி. (தீயணைப்பு துறை), கூடுதல் டி.ஜி.பி. (மாநில பேரிடர் மீட்பு படை) ஆகியோருக்கு தங்கள் மாவட்டங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

முன்னதாக பேரிடர் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு முகாம் - ஒத்திகை நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் ஆசீர்வாதம், போலீஸ் சூப்பிரண்டு மணிவன்னன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story