நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நன்றி அறிவிப்பு கூட்டம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்


நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நன்றி அறிவிப்பு கூட்டம் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்
x
தினத்தந்தி 2 Nov 2019 10:12 PM GMT (Updated: 2 Nov 2019 10:12 PM GMT)

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பேசுகின்றனர்.

சென்னை, 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வீழ்த்த முடியாத வெற்றி வரலாறு

அ.தி.மு.க. ஏழை, எளியோரின் வேதனைகளைத் தீர்க்கின்ற ஆட்சி, தாய்மார்களின் இதயங்களில் இன்பங்களைச் சேர்க்கின்ற ஆட்சி, நடுத்தர மக்களுக்கு நன்மைகளைத் தருகின்ற ஆட்சி, எல்லோரும், எல்லாமும் பெறுகின்ற ஆட்சி என்ற புதிய வரலாற்றை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்., அவர் உருவாக்கிய அந்த வரலாற்றை தமிழ் நாட்டின் வீர வரலாறாக, எவராலும் வீழ்த்த முடியாத வெற்றி வரலாறாக மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா.

அ.தி.மு.க. தமிழ் நாட்டு மக்களுக்குத் தொண்டாற்றத் தோன்றிய ஆயிரம் காலத்துப் பயிர் என்றார் ஜெயலலிதா. நம் இயக்கத்தை வெல்வதற்கு இனி ஒருவர் பிறந்துதான் வர வேண்டும் என்றும் ஜெயலலிதா பெருமை கொள்வார். நடந்து முடிந்த தேர்தலில் இவை அனைத்தும் உண்மையாகி இருக்கிறது.

நன்றி அறிவிப்பு கூட்டம்

அ.தி.மு.க. அரசின் மகத்தான சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அடுத்து வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்றப்பொதுத் தேர்தலிலும் அ.தி.மு.க. அனைவரும் வியக்கத்தக்க வெற்றி பெறும் என்பதை முன்னறிவிக்கும் வகையிலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பிரமாண்ட வெற்றியை வழங்கி இருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 5-ந் தேதி மாலை, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நாங்குநேரி தொகுதியிலும், 8-ந்தேதி மாலை, இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் விக்கிரவாண்டி தொகுதியிலும் மாபெரும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

இந்தப் பொதுக்கூட்டங்களில், வேட்பாளர்களின் வெற்றிக்காக சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அரும்பணியாற்றிய தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும், தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும், தோழமைக் கட்சிகளின் தொண்டர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story