சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 3 டி.எம்.சி.யை எட்டுகிறது


சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 3 டி.எம்.சி.யை எட்டுகிறது
x
தினத்தந்தி 2 Nov 2019 11:31 PM GMT (Updated: 2 Nov 2019 11:31 PM GMT)

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 3 டி.எம்.சி.யை எட்டுகிறது.

சென்னை,

சென்னை மாநகருக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், இந்த ஏரிகள் வறண்டு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலையில் கிடந்தன.

ஆனால் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையாலும், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகள் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் திறந்துவிடப்படும் தண்ணீராலும் பூண்டி ஏரிக்கு கணிசமான நீர் வருகிறது. அங்கிருந்து புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரிகளில் வடகிழக்கு பருவமழையாலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஏரிக்கு தண்ணீர் வரத்து

தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் மற்றும் வடகிழக்கு பருவ மழை மூலம் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதுபோல சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கும் கூடுதல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து ஒரு புறம் இருக்க, மறுபுறம் சென்னை மாநகர பகுதிகளுக்கு 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் பூண்டி ஏரியில் இருந்து 776 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 75 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மொத்த இருப்பு

தற்போதைய நிலையில் பூண்டி ஏரியில் 1,682 மில்லியன் கன அடி, சோழவரத்தில் 194 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 838 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கத்தில் 75 மில்லியன் கன அடி என 2 ஆயிரத்து 789 மில்லியன் கன அடி (2.7 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பு உள்ளது.

4 ஏரிகளிலும் கடந்த 2015-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் 2 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 4 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 1,756 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரிகளின் நீர் இருப்பு விரைவில் 3 டி.எம்.சி.யை எட்டும் நிலையில் அவை உள்ளன. எதிர்வரும் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க இந்த சீசனில் 7 டி.எம்.சி. வரை 4 ஏரிகளிலும் தண்ணீரை சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story