அந்தமானில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
அந்தமானில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தமிழகத்தின் அருகே கடந்து சென்று பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் அந்தமான் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக இருக்கிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
மிதமான மழைக்கு வாய்ப்பு
அந்தமான் மற்றும் அதனையொட்டிய கடற்பகுதிகளில் நாளை (இன்று) மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாக இருக்கிறது. இந்த மேலடுக்கு சுழற்சி அடுத்தடுத்த நாட்களில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதனால் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
திருவாரூரில் அதிக மழை
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. நிலக்கோட்டை, விழுப்புரம், உத்தமபாளையம், திருவண்ணாமலையில் தலா 2 செ.மீ. மழையும், வேலூர், திருப்பத்தூர், ஏற்காடு, போளூர், நன்னிலம், கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story