தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு; மாணவர்கள்-அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு; மாணவர்கள்-அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2019 11:59 PM GMT (Updated: 4 Nov 2019 11:59 PM GMT)

தஞ்சை அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது. இதை கண்டித்து மாணவ, மாணவிகள் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர், 

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் ஊராட்சி அளவிலான மகளிர் சுயஉதவி குழு கூட்டமைப்பு அலுவலகம் அருகே திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. 5 அடி பீடத்தில் 4 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திருவள்ளுவர் சிலை தென்னிந்திய வள்ளுவர் குல சங்கம், திருவள்ளுவர் தெருவாசிகள் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று அன்றைய தஞ்சை மாவட்ட கலெக்டராக இருந்த வீரசண்முகமணியால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த திருவள்ளுவர் சிலை மீது நேற்று முன்தினம் இரவு யாரோ சேறு, சகதியை வீசி அவமதிப்பு செய்ததுடன், பேப்பரால் சிலையின் கண்களையும் மூடிவிட்டு சென்று விட்டனர். நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சிலர், திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். உடனே திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்தும், இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், திருவள்ளுவர் சிலைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறி பெண்கள் உள்பட ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் மறியலை கைவிட்ட அவர்கள் கோஷங்கள் எழுப்பி சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து போலீசார், பக்கத்து வீட்டில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து திருவள்ளுவர் சிலை மீது ஊற்றி சேறு, சகதியை அகற்றி சுத்தம் செய்தனர். பின்னர் மாலை வாங்கி வந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன், திருவள்ளுவர் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த சம்பவத்தையொட்டி அங்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க சம்பவ இடத்தில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட தகவல் பரவியதால் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பிள்ளையார்பட்டியில் ஒன்று திரண்டனர்.

எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். பெண்கள் சிலையின் அருகே அமர்ந்து தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து நுழைவு வாயிலுக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மீண்டும் வகுப்புகளுக்கு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக போலீஸ் நிலையத்தில், பிள்ளையார்பட்டியை சேர்ந்த கண்ணன் புகார் அளித்தார். அதில், எங்களது மரபுவழி தாத்தா அய்யன் திருவள்ளுவர் சிலையின் கண்களை சில சமூக விரோதிகள் பேப்பரால் மூடி, சேறு, சகதிகளை வீசி அவமதிப்பு செய்து விட்டு சென்றுள்ளனர். அவர்களை தேடி பிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதையடுத்து திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story