மத்திய வங்கக்கடலில் புயல் உருவாகிறது : மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


மத்திய வங்கக்கடலில் புயல் உருவாகிறது : மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 5 Nov 2019 3:54 PM IST (Updated: 5 Nov 2019 3:54 PM IST)
t-max-icont-min-icon

அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், தாய்லாந்து அருகே உருவான மேலடுக்கு சுழற்சி அந்தமான் பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இது தற்போது  புயலாக மாற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை புயலாக உருவாகிறது. 

இது வடக்கு மற்றும் வட மேற்கு திசைநோக்கி நகர்ந்து செல்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் இன்று அந்தமான் மற்றும் கிழக்கு தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கும் நாளை, நாளை மறுநாள்  மத்திய வங்க கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மண்டபத்தில் 4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதையொட்டி கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Next Story