பொருளாதாரத்தின் இக்கட்டான நிலைக்கு பா.ஜ.க. அரசே பொறுப்பு; காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்திய பொருளாதாரத்தின் இக்கட்டான நிலைக்கு பா.ஜ.க. அரசே முழு பொறுப்பு என்று காங்கிரஸ் ஊடகத்துறை செயலாளர் சுப்ரியா ஸ்ரீநேட் குற்றம்சாட்டினார்.
சென்னை,
சென்னை சத்தியமூர்த்தி பவனில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகத்துறை செயலாளர் சுப்ரியா ஸ்ரீநேட் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் பொருளாதாரம் இன்று அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம், வேளாண்மையின் வளர்ச்சி ஊசலாடுவதால், வேலைவாய்ப்பு ‘கோமா’ நிலைக்கு போய் விட்டது. மூழ்கும் பொருளாதாரம், சுருங்கிவிட்ட சேமிப்பு, முடங்கிப்போன தொழில் வர்த்தகம், வங்கி முறைகேடுகள் பா.ஜ.க. ஆட்சியில் பொருளாதாரத்தின் அவலநிலையை பிரதிபலிக்கின்றன.
தேசிய மாதிரி புள்ளிவிவரத்தின்படி வேலையில்லாதோர் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. உலக அளவில் மொத்த வேலையில்லாதோரின் விகிதத்தைவிட இரு மடங்கு இந்தியாவில் மட்டுமே உயர்ந்து இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தில் இக்கட்டான நிதிநிலையை உருவாக்கி நிதிச்சீரழிவு ஏற்படுவதற்கு பா.ஜ.க. அரசே முழுப்பொறுப்பு.
மோசமான நிதி விவகாரங்கள் ஒருபுறம் இருக்க 2019-2020-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ஒட்டுமொத்த வரி வருவாயில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு குறையப்போகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் அவசர சேமிப்பில் இருந்து நிதியை பெற்றதில் இருந்தே பொருளாதாரத்தின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது தெரிகிறது.
கடந்த 6 மாதமாக பா.ஜ.க. அரசின் தவறான கொள்கைகள் காரணமாக பொருளாதார பேரழிவை நோக்கி நமது நாடு சென்று கொண்டிருப்பதை கண்டித்து வருகிற 15-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
அதன்படி, மத்திய பா.ஜ.க. அரசின் பொருளாதார பேரழிவுகளை மக்களிடம் கொண்டு செல்கிற வகையில் தமிழகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, மக்கள் ஆதரவை திரட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story