நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம்; அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு


நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் போராட்டம்; அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Nov 2019 11:09 PM GMT (Updated: 5 Nov 2019 11:09 PM GMT)

வீட்டு உபயோக மற்றும் மளிகை பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவன விளம்பரத்தில் பிரபல நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

பூந்தமல்லி,

தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் செயல்படும் இந்த ஆன்லைன் நிறுவனத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி விளம்பர தூதுவராக செயல்படுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்சேதுதியை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திருவள்ளுவர் சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.

அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் அங்கு இருந்து ஊர்வலமாக வந்து வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், ராஜேந்திரன் தெருவில் உள்ள விஜய்சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வியாபாரிகள் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பின்பு விடுவித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த நிறுவனத்தால் சுமார் 20 லட்சம் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதோடு, பலர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இனிமேல் இதுபோன்ற விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என விஜய்சேதுபதி அறிவிக்க வேண்டும். விஜய் சேதுபதி தொடர்ந்து அந்த விளம்பரத்தில் நடித்தால் அவரது திரைப்படம் வெளியாகும் நாளில் திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முற்றுகை போராட்டத்தில் நாடார் சங்கங்களும் பங்கேற்றன. நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரேசன், பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், சமத்துவ மக்கள் கட்சி காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் சீதாலட்சுமி உள்பட நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

Next Story