அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு: போலீசார் விடுமுறை எடுக்க தடை; தமிழக டி.ஜி.பி. அதிரடி உத்தரவு


அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு: போலீசார் விடுமுறை எடுக்க தடை; தமிழக டி.ஜி.பி. அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 6 Nov 2019 12:15 AM GMT (Updated: 5 Nov 2019 11:28 PM GMT)

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம். இதைத்தொடர்ந்து போலீசார் விடுமுறை எடுக்க தடை விதித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தினசரி நடைபெற்ற வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த வாரம் ஓய்வு பெறுவதால் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தீர்ப்பு வெளியாகிறபோது, நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசுக்கு, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதன்படி தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னையில் எந்தெந்த இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறலாம் என்பது குறித்த பட்டியலை உளவுப்பிரிவு போலீசார் தயார் செய்து வருகின்றனர். அதனடிப்படையில் சென்னையில் ராயப்பேட்டை, ஐஸ்அவுஸ், பெரியமேடு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், புளியந்தோப்பு, ஜாபர்கான்பேட்டை உள்பட பல இடங்களில் கூடுதல் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்டிரல், எழும்பூர், கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் உள்பட முக்கிய பஸ்-ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. அயோத்தி வழக்கு தொடர்பாக வாட்ஸ்-அப், பேஸ்-புக், யூ-டியூப் உள்பட சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் கருத்துகளையும் சைபர் கிரைம் போலீசார் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக தமிழக போலீஸ்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு விடுமுறை ரத்துசெய்யப்படுவதாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே. திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர், சி.பி.சி.ஐ.டி, ரெயில்வே உள்பட போலீஸ்துறைகளை சேர்ந்த டி.ஜி.பி.க் கள், கூடுதல் டி.ஜி.பி.க்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள், அனைத்து மண்டல ஐ.ஜி.க் கள், டி.ஐ.ஜி.க்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக போலீஸ்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் போலீஸ்காரர்கள் வரை யாருக்கும் வருகிற 10-ந்தேதி முதல் விடுமுறை வழங்கப்படகூடாது. மறு உத்தரவு வரும் வரையில் இதனை கடை பிடிக்க வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு பணியை மேம்படுத்திடும் வகையில் சிறப்பு படையினர் முகாம் அலுவலகங்களில் எப்போதும் தயார் நிலையில் பணியில் அமர்த்தப்பட வேண்டும். தேர்தல் நேரத்தில் இருப்பது போன்று அனைத்து போலீசாரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story