அரசு டாக்டர்களுக்கு வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் கிடையாது; சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


அரசு டாக்டர்களுக்கு வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் கிடையாது; சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 5 Nov 2019 11:45 PM GMT (Updated: 5 Nov 2019 11:45 PM GMT)

அரசு டாக்டர்களுக்கு வேலை நிறுத்தம் செய்த நாட்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த வாரம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பலர் பாதிக்கப்பட்டனர்.

அரசு டாக்டர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு எச்சரிக்கைகளை அரசு விடுத்தது. பணி முறிவு, பணி இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர் கள் பலர் மீது அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனவே அரசு டாக்டர்கள் பணிக்குத் திரும்பினர். பணிக்குத் திரும்பியதால், அனைத்து நடவடிக்கைகளும் கைவிடப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தார்.

ஆனால் பணி இடமாற்றத்தை ரத்து செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எனவே ஏற்கனவே கூறியபடி பணி இடமாற்றத்தை ரத்து செய்யும்படி அமைச்சரிடம் டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு அந்த நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படமாட்டாது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு டாக்டர்கள் போராட்டம் நடத்திய காலத்தில் யார், யார்? எத்தனை நாட்களுக்கு பணிக்கு வரவில்லை என்று கணக்கெடுத்து வருவதாகவும், அந்த தகவல்கள் திரட்டப்பட்டதும் பணிக்கு வராத நாட்கள் கணக்கிடப்பட்டு அந்த நாட்களுக்கான சம்பளம் நிறுத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

Next Story