எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்


எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2019 4:53 AM IST (Updated: 7 Nov 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

சென்னை,

அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சி பணிகள் குறித்தும், குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் களப்பணிகள் குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி போல, உள்ளாட்சி தேர்தலிலும் தீவிரமாக பணியாற்றி வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றும், எப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.

மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 8.15 மணிக்கு நிறைவடைந்தது.

கூட்டத்திற்கு பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சியில் ஜெயலலிதாவின் நல்லாட்சி ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.வுக்கு அங்கீகாரம் அளித்து விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் வெற்றியை மக்கள் கொடுத்தார்கள். இந்த வெற்றி நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கும். அ.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள நிர்வாகிகள் தயாராகவே இருக்கிறார்கள். இடைத்தேர்தல் வெற்றி பெரிய ஊக்கம் அளித்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story