காவிரியை அசுத்தப்படுத்திய கர்நாடகாவிடம் இழப்பீடு பெற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


காவிரியை அசுத்தப்படுத்திய கர்நாடகாவிடம் இழப்பீடு பெற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Nov 2019 2:49 AM IST (Updated: 8 Nov 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

காவிரியை அசுத்தப்படுத்தியதற்காக கர்நாடகாவிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையில் 153.46 சதுர கி.மீ பரப்பளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. மேட்டூர் அணை இன்றைய நிலையில் முழுமையாக நிரம்பியுள்ளது. கடந்த 10 வாரங்களுக்கு மேலாகவே அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் கூடுதலாக இருந்து வரும் நிலையில், செப்டம்பர் மாத இறுதியில் பண்ணைவாடி, கோட்டையூர், காவிரிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நீர்ப்பரப்பு மீது பச்சை நிறத்தில் வேதிப்படலம் ஏற்படத் தொடங்கியது.

மேட்டூர் அணை நீர் மீது படர்ந்த வேதிப்படலம் அகற்றப்படாத நிலையில், தொடர் வேதிவினைகளின் விளைவாக கடந்த சில நாட்களாக அது நீல நிறமாக மாறியிருக்கிறது. அதுமட்டுமின்றி துர்நாற்றத்தின் தீவிரமும் அதிகரித்திருக்கிறது. மேட்டூர் அணையின் கரையோரப் பகுதிகளில் அமைந்துள்ள ஊர்களில் வாழும் மக்கள், தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அடைந்து கிடக்கின்றனர். கர்நாடகத்திலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் கழிவுகள்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து நாற்றம் வீசத்தொடங்கி பல வாரங்களாகியும் அது சரி செய்யப்படாததை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எனவே, மேட்டூர் அணை தண்ணீரை தூய்மைப்படுத்தவும், துர்நாற்றத்தைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி நீர் தமிழக எல்லைக்குள் நுழையும் பிலிகுண்டுலு பகுதியில் தண்ணீர் மாதிரியை எடுத்து ஆய்வு செய்து, அதில் எந்த அளவுக்கு கழிவுகள் கலந்துள்ளன என்பதை தமிழக அரசு நிரூபிக்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக காவிரியை கர்நாடகம் சாக்கடையாக பயன்படுத்தி கழிவுநீரை வெளியேற்றுவதை நிரந்தரமாகத் தடுக்கவும், இதுவரை காவிரியை அசுத்தப்படுத்தியதற்காக கர்நாடக அரசிடமிருந்து உரிய இழப்பீட்டை பெறவும் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story