திருச்சி விமான நிலையத்தில் 36 மணி நேர சோதனை: மேலும் ரூ.5 கோடி தங்கம், பொருட்கள் பறிமுதல் - அதிகாரிகள் சிக்குகிறார்கள்


திருச்சி விமான நிலையத்தில் 36 மணி நேர சோதனை: மேலும் ரூ.5 கோடி தங்கம், பொருட்கள் பறிமுதல் - அதிகாரிகள் சிக்குகிறார்கள்
x
தினத்தந்தி 8 Nov 2019 4:15 AM IST (Updated: 8 Nov 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் 36 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் மேலும் ரூ.5 கோடி தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி,

சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் மற்றும் விலை உயர்ந்த மின்னணு பொருட்கள் கடத்தி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது.

கடந்த வாரம் ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டதால், திருச்சி உள்பட இந்தியாவில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். இதுபற்றி திருச்சி விமானநிலையத்தில் பணியாற்றும் சுங்கத்துறை உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்களுக்கும், குருவிகளுக்கும்(கமிஷனுக்காக தங்கம் கடத்துகிறவர்கள்) தகவல் கொடுத்துள்ளனர். இதனால் ஏற்கனவே பொருட்களை கடத்தி வருவதற்காக வெளிநாடுகளுக்கு சென்ற குருவிகள் இந்தியாவுக்கு வராமல் வெளிநாடுகளிலேயே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் ஊழல் தடுப்பு வாரம் முடிவடைந்ததை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து தாங்கள் அனுப்பிய குருவிகளை கடந்த 5-ந்தேதி நள்ளிரவில் திருச்சிக்கு வரும் வகையில் அவர்களை அனுப்பியவர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.

அதன்படி அவர்களும் மொத்தமாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தனித்தனியாக விமானங்களில் திருச்சிக்கு புறப்பட்டனர். அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து வரும் குருவிகளிடம் இருந்து பொருட்களை வாங்க வந்த வியாபாரிகள், புரோக்கர்கள் திருச்சி விமான நிலைய வளாகத்தில் காத்திருந்தனர்.

இந்தநிலையில் 5-ந்தேதி நள்ளிரவில் திருச்சி விமான நிலையம் வழியாக அதிக அளவில் தங்கம் உள்ளிட்ட வெளிநாட்டு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக மத்திய சுங்கத்துறை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சென்னை, கோவை, தூத்துக்குடி பகுதியில் இருந்து மத்திய சுங்கத்துறை வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் 22 பேர் அடங்கிய குழுவினர் துணை இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் கடந்த 5-ந்தேதி இரவு திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர்.

அவர்கள் இரவு 10.30 மணிக்கு தங்கள் அதிரடி சோதனையை தொடங்கினார்கள். இதை அறிந்த வியாபாரிகளும், புரோக்கர்களும் விமான நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர். கடந்த 5-ந்தேதி இரவு 10.30 மணிக்கு தொடங்கிய சோதனை நேற்று காலை 10.30 மணிக்கு முடிவடைந்தது.

36 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின்போது வெளிநாட்டில் இருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த குருவிகள், அடிக்கடி வெளிநாடு சென்றுவருவோர் என்று 130 பேர் சிக்கினார்கள். அவர்கள் கொண்டு வந்த உடைமைகள் மற்றும் பொருட்கள் தனித்தனியாக ஸ்கேன் செய்யப்பட்டன.

இவர்களிடம் இருந்து நேற்று முன்தினம் தங்க நகைகள், கட்டிகள், தகடுகள், கம்பிகள் மற்றும் பசை வடிவில் என்று ரூ.11 கோடி மதிப்பிலான 30 கிலோ எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று மேலும் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கம் மற்றும் ரூ.4 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் போன்கள், ஐபோன், ஐபேடுகள் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் என்று ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் உடலில் மறைத்து தங்கம் கடத்தி வந்த 12 பேர் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. மற்றவர்கள் உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்துவிட்டு, விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் ஆஜராக வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

மேலும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகளை, மத்திய சுங்கத்துறை வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் தங்கள் பிடியில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story