மாநில செய்திகள்

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு: சகல தரப்பும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும் - தமிமுன் அன்சாரி வேண்டுகோள் + "||" + Babri mosque verdict: All sides should face the situation without restraint - Tamim Ansari

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு: சகல தரப்பும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும் - தமிமுன் அன்சாரி வேண்டுகோள்

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு: சகல தரப்பும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் எதிர்கொள்ள வேண்டும் - தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வர உள்ள நிலையில், சகல தரப்பும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும் என்று தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாபர் மசூதி இடம் யாருக்கு சொந்தம்? என்ற வழக்கின் தீர்ப்பை உலகமே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இத்தீர்ப்பு என்பது நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைய கூடாது. மாறாக ஆவணங்கள் மற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என நீதியை விரும்பும் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்காக நீண்ட நெடிய அறப்போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம். இப்போது இது பற்றிய விவாதங்கள் அதிகமாகி எதிர்பார்ப்புகள் பெருகியுள்ளது. வரலாறு அனைத்தையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.

எல்லாவற்றையும்விட நாட்டு மக்களின் ஒற்றுமையும், பொது அமைதியும் முக்கியமானது. கடந்த காலங்களில் இப்பிரச்சினைகளால் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிர்கள் பறி போயிருக்கின்றன. கலவரங்களில் பல நூறு கோடி ரூபாய் சொத்துகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இனி இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கக் கூடாது என்பதே அனைவரின் விருப்பமாகும்.

தீர்ப்புக்கு பின் அதுகுறித்த வெற்றி ஆரவாரங்கள், அல்லது கண்டன போராட்டங்கள் ஆகியன நாட்டின் அமைதியை குலைத்து விடும் என்பதால், சகல தரப்பும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்துடன் தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களை பிளவுப்படுத்தும் தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகக் கூடாது என்பதே எங்களின் நிலைபாடாகும். சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அரவணைப்பு, பொறுமை, மன்னிப்பு ஆகியன மனித குலத்தின் மிகச்சிறந்த பண்புகள் என்பதை இந்திய சமூகம் உலகிற்கு காட்டிட வேண்டிய தருணம் இது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் அடையாளமாக இருந்து வருவதால், வரவிருக்கும் பாபர் மசூதி இடம் தொடர்பான 27 ஆண்டு கால வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை, எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லாமல், மனப்பூர்வமாக அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தீர்ப்புக்கு பின் அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல் பெருந்தலைவர் மக்கள்கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலனும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் முழுமனதுடன் ஏற்கவேண்டும் என்று கூறி உள்ளார்.