மாநில செய்திகள்

அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு குறித்து முஸ்லிம் கட்சிகள் கருத்து + "||" + Muslim parties comment on final verdict in Ayodhya case

அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு குறித்து முஸ்லிம் கட்சிகள் கருத்து

அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு குறித்து முஸ்லிம் கட்சிகள் கருத்து
அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு குறித்து முஸ்லிம் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
சென்னை, 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அயோத்தியில் பாபரி மஸ்ஜித் - ராம ஜென்மபூமி இடம் சம்பந்தமான நீண்டகால வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட அந்த 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பதே வழக்கின் சாராம்சம். இப்பிரச்சினைக்குரிய வழக்கில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு, தீர்ப்பு அளித்து இருக்கிறது. இதில் தனிச்சிறப்பு என்னவென்றால் 5 நீதிபதிகளும் ஒரே கருத்தை சொல்லி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பே இறுதியானது. எனவே இத்தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் மதிக்கவேண்டும். இந்த தீர்ப்பின் அம்சங்கள் குறித்து விளக்கலாமே தவிர, விமர்சிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் வாதமோ, எதிர்வாதமோ தேவையில்லை. இந்திய ஒருமைப்பாட்டில், ஜனநாயகத்தில், மதநல்லிணக்கத்தில் நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் இத்தீர்ப்புக்கு கட்டுப்பட்டவர்கள். முஸ்லிம் மத அறிஞர்கள், உலமாக்களும் இந்த தீர்ப்பை மதித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும். மக்களுக்கு இருக்கும் பெரும் கடமை என்னவென்றால், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதித்து மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முழு ஒத்துழைப்பு வழங்குவது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு மதச்சார்பின்மையின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியின் மீதும் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தையும், மனவேதனையையும் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு முரண்பாடுகளின் மொத்த வடிவமாகவும், தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட இதர மதச்சார்பற்ற சக்திகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து ஜனநாயக ரீதியில் பாடுபட உறுதி எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது சட்டம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இப்போது நம்பிக்கைகள் மற்றும் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி தீர்ப்பின் வாசகங்கள் அமைந்திருக்கிறது. தீர்ப்பின் பல இடங்களில் சமரசம் மற்றும் இணக்கம் கருதி நீதிபதிகள் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள் என்பது தெரிகிறது.

ஆனால், அந்த இடம் சம்மந்தமான தீர்ப்பு இப்போது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுக்கொன்று முரண்கள் இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இத்தீர்ப்பு வெளியானதும், பெரும்பாலான இந்து சமுதாய உறவுகள் முஸ்லிம்களை நோக்கி ஆதரவு கரம் நீட்டி ஆறுதல் கூறி வருவது நெகிழ்ச்சியளிக்கிறது.

எனவே, இக்கட்டான இத்தருணத்தில் அனைத்து தரப்பும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அரசியல் சாசன சட்டம், சமூக நீதி, மதச்சார்பின்மை, நல்லிணக்கம் ஆகியவற்றை காக்க, தொடர்ந்து ஜனநாயக சக்திகளோடு இணைந்து நின்று பணியாற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீர்ப்பானது நீதியின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும் இருக்கும் என நாங்கள் நம்பினோம். ஆனால், நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு என்பது ஏமாற்றமளிக்கிறது. இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் உள்பட டெல்லியில் உள்ள அமைப்புகளின் தலைவர்களோடு கலந்து கொண்டு, அவர்களின் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒத்துழைக்கும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல், இந்திய தேசிய லீக் தேசிய பொதுச் செயலாளர் நிஜாமுதீன், அகில இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் ஜாஹூரூத்தின் அகமது உள்ளிட்டோர் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அயோத்தி வழக்கை படமாக்கும் கங்கனா
நடிகை கங்கனா ரணாவத் அயோத்தி வழக்கை படம் எடுக்க உள்ளார்.