உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு - அதிமுக அறிவிப்பு


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு - அதிமுக அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2019 3:03 PM IST (Updated: 10 Nov 2019 3:03 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று கூறி
உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதனால் தேர்தல் நடத்த கோர்ட்டு தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப்போனது. இதற்கான காரணத்தை அரசு அவ்வப் போது கோர்ட்டில் தெரிவித்து வந்தது.

இந்த நிலையில்  மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளை செய்து வந்தது. இந்த பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அனைத்து பதவிகளும் பிரிக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என்று அதிமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்கள் நவ.,15 மற்றும் 16ல் கட்சி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் கட்டணங்களை செலுத்தி, விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம். 

மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ.25 ஆயிரமும், வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், நகர்மன்ற தலைவர் பதவிக்கு ரூ.10 ஆயிரமும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு ரூ.2,500ம்,பேரூராட்சி தலைவர் பதவிக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,500ம் விருப்ப மனு கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக விண்ணப்ப படிவங்களை பெறும் கட்சி நிர்வாகிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story