அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? - முதல்வர் பழனிசாமி
அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்து உள்ளார்.
சென்னை,
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து, சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது, அதற்காக செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள், புறநகர் மற்றும் மாநகர மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்
கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தன்னாட்சி பெற்ற அமைப்பு , இதில் அரசுக்கு தொடர்பு இல்லை. கால அளவு குறைவாக இருப்பதால் விருப்ப மனு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் அரசின் திட்ட பணிகளுக்காக எங்குமே நிலம் எடுக்க முடிவதில்லை. எதிர்ப்பு, போராட்டம் மற்றும் வழக்குகளால் சாலை விரிவாக்கம், மின்கோபுரம் உள்ளிட்டவை அமைப்பதில் தாமதமாகிறது. எந்த திட்டத்திற்காகவும் தமிழகத்தில் நிலம் எடுக்க முடியவில்லை. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடியும்.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் போலீஸ் சோதனைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் . வாகன தணிக்கையின்போது காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படியே காவல்துறை செயல்பட்டு வருகிறது. கட்சிகளின் கொடி கம்பங்களை நடக்கூடாது என்ற உத்தரவு இதுவரை இல்லை.
கட்சி ஆரம்பித்த சிவாஜி நிலைமை தான் நடிகர்களுக்கு வரும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். அரசியல் குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? அடிப்படையே தெரியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார். தொண்டர்களாவது தனது படத்தை பார்க்கட்டும் என்றுதான் கமல் நடித்துக் கொண்டிருக்கிறார். 2 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது ஏன்?
நாட்டில் உள்ள கிராமங்கள், மக்கள் பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்த அடிப்படையே தெரியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் கமல் என்று கூறினார்.
மேலும், மோடியின் மண்ணான இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன் என்று ஓ.பி. ரவீந்திரநாத் அமெரிக்காவில் பேசியதில் தவறு இல்லை என்றும் கூறினார்.
Related Tags :
Next Story