குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Nov 2019 10:45 PM GMT (Updated: 12 Nov 2019 10:14 PM GMT)

16¼ லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

சென்னை, 

16¼ லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.

குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தொகுதி-4-ல் (குரூப்-4) அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவி ஆகியவற்றை உள்ளடக்கி 6 ஆயிரத்து 491 காலி இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி வெளியிட்டது. இதற்கு 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 575 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நேற்று வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தரவரிசை பட்டியல்

விண்ணப்பித்து தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணை உள்ளடு செய்து தங்களது மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். தேர்வாணையத்தின் விதிமுறைகளின்படி, 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தேர்வு நடந்த நாளில் இருந்து 72 நாட்களில் தரவரிசைப்படுத்தி தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுபோன்று குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தேர்வாணைய வரலாற்றில் இது முதன்முறை ஆகும். இதற்கு முன்பு 105 நாட்களில் தேர்வு முடிவு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் எந்த மாநில தேர்வாணையமும் இவ்வளவு அதிக விண்ணப்பதாரர்கள் எழுதிய தேர்வு முடிவுகளை இடஒதுக்கீட்டு அடிப்படையில் தரவரிசைப்படுத்தி வெளியிட்டது இல்லை. அதில் நம்முடைய தேர்வாணையம் நாட்டிலேயே முன்னோடியாக திகழ்கிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு தேர்வர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், பொதுவான தரவரிசை மற்றும் இன சுழற்சி, சிறப்பு ஒதுக்கீட்டுக்கான தரவரிசை வெளியிடப்பட்டு இருக்கின்றன. தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு விதிகளின் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

அதற்கான பட்டியல் விரைவில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி வாயிலாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். இவை பெறப்படாவிட்டால் தேர்வாணையம் பொறுப்பல்ல. தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story