தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்வு
கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்து உள்ளது.
சென்னை,
கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில், கோடையில் சென்னையில் தண்ணீர் லாரி பின்னால் மக்கள் ஓடும் அவலம் இருந்து வந்தது.
பருவமழை பொய்த்ததால் ஏரிகள் வறண்டு விளையாட்டு மைதானங்கள்போல காட்சியளித்தன. நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
மாநிலம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியமும் இணைந்து அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் பலனாக சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் பெய்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் சராசரியாக 2.23 மீட்டர் வரை அதிகரித்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்து உள்ளது என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்து உள்ளது. குடிமராமத்து பணி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது என கூறி உள்ளது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் மழை நீர் கட்டமைப்புகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பலனாலேயே தற்போது சென்னையில் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளும் தற்போது கைகொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய 2 மீட்டர் அளவிற்கு கணிசமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதே போல், ராமநாதபுரம், கோவை, நாமக்கல், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 0.50 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி, மாதவரம் பகுதிகளில் 3 முதல் 2 மீட்டர் வரையும், ராயபுரம், அண்ணா நகர், கோடம்பாக்கம், பெருங்குடி பகுதிகளில் 1 முதல் 2 மீட்டர் வரையும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மாதவரத்தில் செப்டம்பரில் நிலத்தடி நீர்மட்டம் 6. 30 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபரில் ஒன்று புள்ளி 86 மீட்டர் உயர்ந்து 4.44 மீட்டர் அளவில் தண்ணீர் உள்ளது. அதேபோல, செப்டம்பர் மாதத்தில் அம்பத்தூரில் நிலத்தடி நீர்மட்டம் 7. 49 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் 2.76 மீட்டர் அதிகரித்து 4 மீட்டரில் இருக்கிறது. கோடம்பாக்கத்தில் செப்டம்பர் மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம் 7. 39 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலையில், 1. 48 மீட்டர் அதிகரித்து அக்டோபரில் 5. 91 மீட்டரிலேயே நீர் கிடைக்கிறது.
ஆலந்தூரில் நிலத்தடி நீர்மட்டம் செப்டம்பர் மாதத்தில் 7.60 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலையில், அக்டோபரில் 2.48 மீட்டர் உயர்ந்து 5.12 மீட்டராக அதிகரித்துள்ளது. அடையாறில் நிலத்தடி நீர்மட்டம் செப்டம்பர் மாதத்தில் 6.32 மீட்டர் ஆழத்தில் இருந்தது. அதுவே அடுத்து வந்த அக்டோபரில் நிலத்தடி நீர்மட்டம் 1.57 மீட்டர் உயர்ந்து 4 .75 மீட்டராக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story