கோவை: ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி
கோவை இருகூர் அருகே ராவுத்தர் பாலம் பகுதியில் ரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.
கோவை,
கோவையில் இருகூர் அருகே ராவுத்தர் பாலம் அமைந்துள்ளது. இந்தப்பாலம் அருகே, அதிகாலை சில உடல்கள் சிதறி கிடப்பதாக போத்தனூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் நான்கு உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த இளைஞர்கள் சித்திக், கருப்பசாமி, கவுதம் உள்ளிட்ட நான்கு பேர் என்பதும் இவர்கள் கொடைக்கானல் மற்றும் ராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் 20 முதல் 22 வயது மதிக்கத்தக்கவர்களாக உள்ளனர். இவர்கள் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளனர்.
இவர்களில் இரண்டு பேர் இறுதியாண்டு படித்து வந்தனர். மேலும் இரண்டு பேர் அரியர் தேர்வு எழுத வந்தவர்கள் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நான்கு பேரும் ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்தும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Related Tags :
Next Story