மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் விசாரணை
மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சென்னை,
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று விடுதி அறையில் பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதே மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து மாணவியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மாணவியின் உடைமைகளும் ஒப்படைக்கப்பட்டன.
இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம் என அவரது செல்போனில் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருந்தார்.
மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்தப் பதிவில் கூறியிருந்தார். அந்த செல்போன் பதிவுகள் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு முந்தைய நாளான நவம்பர் 8ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதை தொடர்ந்து மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.
ஐஐடியில் உள்ள 4 பேராசிரியர்களிடமும், மாணவி பாத்திமா லத்தீப் உடன் படிக்கும் மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி தற்கொலை செய்து கொண்ட நள்ளிரவு 12 மணிக்கு கடைசியாக பாத்ரூம் சென்று வருவது போன்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. இதுவரை ஐஐடி பேராசிரியர்கள் உட்பட 25 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். மாணவியின் பெற்றோரிடம் போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் செல்போனில் இருந்து வெளியான குறுஞ்செய்தியின் உண்மை தன்மையை கண்டறிய மாணவியின் செல்போனை சைபர் ஆய்வகத்திற்கு அனுப்ப அனுமதி கேட்டு போலீசார் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு நீதி வேண்டி, மாணவர் அமைப்பினர் சென்னை ஐஐடியை முற்றுகையிட்டு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story