கேரள மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
சென்னை ஐ.ஐ.டி.யில் கேரள மாணவி தற்கொலை செய்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவரது மகள் பாத்திமா லத்தீப் (வயது 20). சென்னை ஐ.ஐ.டி.யில் முதலாம் ஆண்டு எம்.ஏ. மானுடவியல் படித்து வந்த அவர் கடந்த 8-ந்தேதி ஐ.ஐ.டி. விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவி பாத்திமா லத்தீப் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில், “என்னுடைய சாவுக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம். மேலும் விவரங்கள் செல்போன் நோட்ஸ் பகுதியில் உள்ளது என்ற தகவல் இடம் பெற்றிருந்தது. எனவே அதனடிப்படையில் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்பட 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தனது மகள் பாத்திமா லத்தீப் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதன் பின்னணி குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும் என்றும் அவருடைய தந்தை அப்துல் லத்தீப், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தார். மேலும் இந்த மனுவை பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனுப்பி வைத்தார்.
அப்துல் லத்தீப் அளித்த மனுவை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்த பினராயி விஜயன் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் நேற்று காலை 11.30 மணியளவில் ஐ.ஐ.டி. வளாகத்துக்கு வந்தார். அவருடன் இணை கமிஷனர் சுதாகர் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்தனர். பாத்திமா லத்தீப் தற்கொலை செய்த அறையை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார்.
பின்னர் ஐ.ஐ.டி. முதல்வர், குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன், மாணவி பாத்திமா லத்தீப்புடன் விடுதியில் தங்கி இருந்த மாணவ-மாணவிகள், விடுதி வார்டன் உள்பட பலரிடம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் முன்னிலையில் போலீஸ் அதிகாரிகள் அதிரடி விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
விசாரணை முடிந்த பின்னர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினோம். கோட்டூர்புரம் போலீசார் வசம் இருந்த இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்படுகிறது.
இதற்காக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் ஒரு சிறப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஈஸ்வரமூர்த்தி சி.பி.ஐ.யில் சிறப்பாக பணியாற்றியவர்.
இந்த குழுவில் சி.பி.ஐ.யில் பணியாற்றிய உதவி கமிஷனர் பிரபாகரனும் இடம் பெற்றுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் மெலோன்னா புலன் விசாரணை அதிகாரியாக இருப்பார்.
இந்த வழக்கில் புலன் விசாரணை விரைவில் முடிவடைந்து, உண்மையை வெளியில் கொண்டு வர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். தற்போது புலன் விசாரணை குறித்து எந்த தகவலையும் வெளியில் சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவி செல்போன் எண் பாஸ்வேர்ட் தெரியாததால் ‘நோட்ஸ்’ பகுதியில் அவர் பதிவிட்டுள்ள தகவலை போலீசாரால் பெற முடியவில்லை. தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ‘சைபர் க்ரைம்’ போலீசார் உதவியுடன் மாணவி பாத்திமா லத்தீப்பின் ‘நோட்ஸ்’ பகுதியில் உள்ள தகவலை திரட்டி, உடனடியாக தீவிர விசாரணை களத்தில் இறங்கினர்.
மாணவி பாத்திமா லத்தீப்பை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐ.ஐ.டி. அருகே தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story