எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. முயற்சிப்பதாக பொய் பிரசாரம் மு.க.ஸ்டாலின் பேட்டி


எப்போது வந்தாலும் சந்திக்க தயார்: உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. முயற்சிப்பதாக பொய் பிரசாரம் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2019 4:00 AM IST (Updated: 16 Nov 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. நிறுத்த முயற்சிப்பதாக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுவதாகவும், உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, 

உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. நிறுத்த முயற்சிப்பதாக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்யப்படுவதாகவும், உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

128 மாணவிகளுக்கு லேப்-டாப்

சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடங்கப்பட்டுள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 128 மாணவிகளுக்கு அத்தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று லேப்-டாப் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, சுதர்சனம், கு.க.செல்வம், தாயகம் கவி, கே.பி.பி.சாமி, ரங்கநாதன், ரவிச்சந்திரன், ஆர்.டி.சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதன்பின்னர், மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிமன்றத்துக்கு சென்றது ஏன்?

இதற்கு முன்னர் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடுகளை வழங்காமல் ஒரு நாடகத்தை நடத்தினார்கள். தேர்தல் தேதியெல்லாம் அறிவித்தார்கள். ஆகவே உரிய ஒதுக்கீட்டுடன் தேர்தல் முறையாக நடத்த வேண்டும் என்றுதான் ஆர்.எஸ்.பாரதி ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது எங்களது கோரிக்கை இல்லை; முறையாக நடத்த வேண்டும். ஒதுக்கீடுகள் முறையாக இல்லை, அதை சரிசெய்யுங்கள் என்று கோரித்தான் நீதிமன்றத்துக்கு சென்றோம். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இதை நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். ஆனால், திரும்பத்திரும்ப அதே பொய்யை அவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

இப்போதும் திட்டமிட்டு 4 மாவட்டங்கள் 9 மாவட்டங்களாக புதிதாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் 3 மாவட்டங்களாகவும், காஞ்சீபுரம் 2 மாவட்டங்களாகவும், விழுப்புரம் 2 மாவட்டங்களாகவும், திருநெல்வேலி 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் வாக்குகள் பெறக்கூடிய, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 5 ஆயிரம் வாக்குகள் பெறக்கூடிய ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் என எப்படி பிரித்து தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்ற சந்தேகத்தை நாங்கள் கேட்டுள்ளோம்.

தேர்தலை நிறுத்த சொல்லவில்லை

அதுமட்டுமின்றி, ஏற்கனவே ஐகோர்ட்டு எந்தெந்த முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளதோ, அந்த அடிப்படையில் நடத்தப்படுகிறதா என்பது குறித்து எங்கள் அமைப்புச் செயலாளர் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து, தேர்தலை எப்படி நடத்தப்போகிறீர்கள் என்றுதான் கேட்டுள்ளார்.

சி.சி. டிவி கேமரா பொருத்துவீர்களா?. ஒதுக்கீடு முறையாக செய்துள்ளர்களா?. ஐகோர்ட்டு வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி நடத்தப்போகிறீர்களா? மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதே அவற்றைச் சரிசெய்து தேர்தல் நடத்தப்போகிறீர்களா? என்றுதான் கேட்டுள்ளோம். மற்றபடி தேர்தலை நிறுத்த வேண்டும் என்று ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

எப்போது வந்தாலும் சந்திக்க தயார்

ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான், இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறதோ என்பதுதான் எங்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகம். நாங்கள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டசபையை கூட்ட வேண்டும்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 8 மருத்துவக்கல்லூரிகளில் நீட் பயிற்சி மையத்தில் சேராமல் மருத்துவக்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட இல்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,200 மருத்துவ இடங்களில் 48 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்திற்கு போகாமல் மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்கள்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,650 சீட்டுகளில் 52 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்திற்கு போகாமல் சேர்ந்துள்ளார்கள். இந்த தகவல்களை எல்லாம் அ.தி.மு.க. அரசே உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளது.

ஆகவே தமிழக மக்களை ஏமாற்றாமல், சட்டமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடரினை கூட்டி, அதில், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதலைப் பெற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களின் மருத்துவக்கனவைச் சிதைக்கும் கொடிய நீட் தேர்வு அடுத்து வருவதற்குள், இப்போதே அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்; என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story