மாநில செய்திகள்

அரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு + "||" + ADMK-DMK clash at government function Excitement in the presence of the Minister

அரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு

அரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்அமைச்சர் முன்னிலையில் பரபரப்பு
அரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர், 

அரசு விழாவில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் முதல்- அமைச்சர் குறைதீர்வு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது பயனாளிகளுக்கு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று அணைக்கட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் கே.சி.வீரமணி, அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாக்குவாதம் - மோதல்

விழாவில் நந்தகுமார் எம்.எல்.ஏ. பேசும் போது தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கவில்லை என்று பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்படுகிறது. தி.மு.க. எம்.எல்.ஏ. விளம்பரத்திற்காக பேசியது தவறு என்றார். இதில் எம்.எல்.ஏ. நந்தகுமாருக்கும், அமைச்சர் வீர மணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆவின் தலைவர் வேலழகன், எம்.எல்.ஏ. பேசிக்கொண்டிருந்த மைக் சுவிட்சை அணைத்தார். அதற்கு எம்.எல்.ஏ. ஒருமையில் பேசியதால் மேடையில் இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பாக இருந்தது. அமைச்சர் மற்றும் கலெக்டர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

போலீஸ் அதிகாரியை கீழே தள்ளிய தொண்டர்

கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் ஆவின்தலைவர் வேலழகனை மேடையை விட்டு இறங்குமாறு கூச்சலிட்டனர். அப்படி இல்லையென்றால் அணைக்கட்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாபுவை மேடையில் ஏற்றுங்கள் என்றனர்.

உடனே பாபு மேடையில் ஏற முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் மேடையில் ஏற அனுமதி கொடுக்கவில்லை. உடனே மேடையில் இருந்த தி.மு.க. தொண்டர் ஒருவர் துணை போலீஸ் சூப்பிரண்டை பிடித்து கீழே தள்ளினார். சுதாரித்து கொண்ட அவர் அந்த தொண்டரை தாக்கினார். இதையடுத்து தி.மு.க.வினர் அமைதியானார்கள்.