அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்புகிறார்


அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை திரும்புகிறார்
x
தினத்தந்தி 18 Nov 2019 5:06 AM IST (Updated: 18 Nov 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (திங்கட்கிழமை) சென்னை திரும்புகிறார்.

சென்னை,

தமிழகதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு முறை பயணமாக கடந்த 7-ந் தேதி அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்குள்ள சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 10-வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு மற்றும் பாராட்டு விழாவில் பங்கேற்ற அவருக்கு தங்க தமிழ்மகன் விருது வழங்கப்பட்டது. சிகாகோ இந்திய தூதரகத்தில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் உறைவிட நிதிக்கு ரூ.720 கோடி முதலீடுகள் திரட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வாஷிங்டனில் நடந்த உலக வங்கியில் தமிழக மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதியுதவி குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து, ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கைக்கு தன் சொந்த பங்காக ரூ.7 லட்சம் நிதியை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

அதன்பின்னர், நியூயார்க் தமிழ்சங்கம் சார்பில் நடந்த விழாவில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அமெரிக்க பயணத்தில் அவருக்கு 6 விருதுகள் வழங்கப்பட்டன.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியூயார்க்கில், உலக தமிழ் இளைஞர் பேரவை சார்பாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அமெரிக்க நாட்டின் தமிழ் இளைஞர் உலகக் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் விஜய் பிரபாகர், தமிழ் இளைஞர் உலகக் கூட்டமைப்பின் நியூயார்க் சேப்டர் தலைவர் கே.ஓ.தாமஸ், தமிழக அரசின் நிதித்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தொழில்களுக்கான களமாக தமிழகத்தை தேர்வு செய்யுங்கள், உங்கள் முதலீடுகளை தமிழகத்திலே செய்யுங்கள் என்று கேட்கவே நான் இங்கு வந்துள்ளேன். இன்றைக்கு, அசைக்க முடியாத, யாராலும் தவிர்க்க முடியாத, முன்னேறத் துடிக்கின்ற, கடும் உழைப்பைத் தரத் தயாராக இருக்கின்ற, மாபெரும் சக்தியாக இளைஞர் சக்தி விளங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு வழி காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

எனவே, இளைய தலைமுறையிடம் நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து, அவர்களது புதிய சிந்தனைகளை மனம் உவந்து ஏற்று, அதைச் செயல்படுத்திட அவர்களுக்கு வழி அமைத்துத் தந்து, புதிய சமுதாயம் படைத்திட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

வாருங்கள், தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள், புதிய தொழில் தொடங்கும் உங்களுடைய புதுமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் அரங்கேற்றுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அ.தி.மு.க. அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் 10 நாள் அமெரிக்க பயணம் நேற்று நிறைவடைந்தது. அங்கிருந்து விமானம் மூலம் புறப்படும் அவர் இன்று(திங்கட்கிழமை) இரவு 8 மணியளவில் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Next Story