‘பாட்ஷா’ சினிமா வந்த போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி


‘பாட்ஷா’ சினிமா வந்த போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 19 Nov 2019 4:42 AM IST (Updated: 19 Nov 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

‘பாட்ஷா’ சினிமா வந்த போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும் என விருதுநகரில் அளித்த பேட்டியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர்,


விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

தவறு இல்லை

ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் நான் பேசியது குறித்து தி.மு.க.வினர் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

நான் பேசியதில் தவறு ஒன்றுமில்லை. அ.தி.மு.க.வினரின் சட்டையை தி.மு.க.வினர் பிடித்தால் பதிலுக்கு தி.மு.க.வினரின் சட்டையை கிழியுங்கள் என்றுதான் கூறினேன். அவர்கள் உங்கள் கதவை உடைத்தால் நீங்கள் அவர்கள் கதவை உடையுங்கள் என்றுதான் சொன்னேன். வன்முறையை தூண்டும் அளவுக்கு ஏதும் பேசவில்லை. பல இடங்களில் தி.மு.க.வினர்தான் அ.தி.மு.க.வினரை தாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் ஒரு ஆன்மிகவாதி. அதனால்தான் அவர் நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என கூறியுள்ளார். அவர் கூறியது உண்மைதான். சிவாஜி கணேசனைப் பற்றி முதல்-அமைச்சர் தவறான கருத்து எதுவும் கூறவில்லை. சிவாஜி கணேசன் மீது அ.தி.மு.க.வுக்கு என்றுமே மரியாதை உள்ளது.

நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் வருங்காலத்தில் ரஜினி, கமல், விஜய் ஆகிய 3 பேரும் கூட்டணி சேர்ந்தால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் அஜித்தை சேர்க்க ஏன் மறுத்துவிட்டார் என்று தெரியவில்லை.

இதெல்லாம் நடைபெறக் கூடியது அல்ல. எந்தெந்த நேரத்தில் எப்படி வியூகம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாக தெரியும்.

‘பாட்ஷா’ சினிமா

ரஜினிகாந்தை பொறுத்தமட்டில் அவர் பாட்ஷா சினிமா வெளியானபோது அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் முதல்-அமைச்சர் ஆகியிருப்பார். தற்போது ரஜினிகாந்துக்கு 70 வயது ஆகிவிட்டது. இனி ஒரு அரசியல் கட்சி தொடங்கி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வது என்பது இயலாத காரியம். யாருமே உடனடியாக முதல்-அமைச்சர் ஆகிவிட முடியாது.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என்று டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. 20 பேர் இரட்டை இலை சின்னம் வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்த 20 பேரும் எங்கள் பக்கம் வந்துவிட்டனர். தற்போதுள்ள நிலையில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் பந்தயகுதிரைகள்.

கூட்டணி தொடருமா?

நாடாளுமன்ற தேர்தலில்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தோமே தவிர உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை பா.ஜனதா மேலிடம்தான் முடிவு செய்யும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எங்கள் நிலையும் அதுதான். உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. உடனான கூட்டணி தொடருமா? என்பதை முதல்-அமைச்சரும் துணை முதல்-அமைச்சரும்தான் முடிவு செய்வார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சி தலைமை இது பற்றி முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story